சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் படம் இது.
படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “தலைமுறை தலைமுறையாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்த வரிசையில் நிச்சயம் ‘மார்க்’ படமும் இணையும். கிச்சா சுதீப்பும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எந்தவொரு பிளாக்மார்க்கும் இல்லாமல் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவது பெருமையான விஷயம். கிச்சா சுதீப் தமிழிலும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியது கூட இயல்பான ஒன்றுதான்.
இயக்குநர் விஜய் கார்த்திகேயன், “இந்த மேடையில் நான் இருக்க முக்கிய காரணமே சுதீப் சார்தான். அவர் போன்ற பெரிய நடிகருடன் இரண்டாவது முறை படம் செய்வது எளிது கிடையாது. அவருடன் வேலை செய்வது என் சகோதரருடன் பணிபுரிவது போல இருக்கும். சுதீப்பின் நகைச்சுவை பக்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. அதை ‘மார்க்’ படத்தில் பார்ப்பீர்கள். சுதீப் ரசிகர்களுக்காகவே எழுதிய கதை இது. நிச்சயம் படம் அவர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாங்கள் மூன்றாவது முறை இணையவும் வாய்ப்பிருக்கிறது. அதை காலமும் சூழலும் முடிவு செய்யும்” என்று சொன்னது கூட இயல்பான சினிமா விழா பேச்சுதான்.
நடிகர் நவீன் சந்திரா, “பல வருடங்களாக தமிழ், தெலுங்கில் படம் நடித்துக் கொண்டிருந்தேன். கன்னட ரசிகர்கள் அவர்களுடன் என்னை கனெக்ட் செய்து கொள்ளும்படியான கதாபாத்திரம் வரவேண்டும் என காத்திருந்தேன். அப்படியான படமாக ‘மார்க்’ எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பெயர் ‘பத்ரா’. என்னுடைய அம்மா சுதீப் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவர் இருக்கும் இந்தப் படத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி.” என்று சொன்னது கூட சகஜம்தான்.
நடிகர் யோகிபாபு, “நான் சினிமாத் துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிறது. வளர்ச்சி வந்தால் பிரச்சினைகளும் கூடவே வரும் என்பார்கள். அதுபோலதான் என் மீது சுமத்தப்படும் பல பழிகளும். ” என்று கூற,
கிச்சா சுதீப் தன் பேச்சில். ” எங்க செட்டிலேயே பயங்கர பிஸியான நடிகர் என்றால் யோகிபாபு தான். இன்ஸ்டால்மெண்ட்டில் வந்து நடித்துக் கொடுப்பார். ” என்று சொன்னபோது அரங்கம் கலகலத்தது.
யோகிபாபு சொன்னதை உடனே நிரூபித்து இருக்கிறாரே சுதீப்?
யோகிபாபு மேல் கிச்சா சுதீப்புக்கே பொறாமை?
- ராஜ திருமகன்
