ADVERTISEMENT

மார்க் ஆண்டனி : தியேட்டர் உரிமையாளர்கள் சொல்வது என்ன?

Published On:

| By Kavi

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இன்று (செப்டம்பர் 15) வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி விஷால் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு முக்கியமான படம்.

அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறாத நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி தவிர்க்க முடியாத ஒன்றாக பார்க்கப்பட்டது. அதனால் படத்திற்கான முதல் பார்வை முதல் ட்ரெய்லர் வெளியீட்டு வரை அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிகளையும் விஷால் நேரடி கவனம் செலுத்தி நடத்தினார்.

ADVERTISEMENT

படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் வெளியாகுமா என்கிற அசாதாரமான சூழல் நீதிமன்றத்தில் படத்தை வெளியிட்ட லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கால் நிலவியது. ஒரு வழியாக இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் மார்க் ஆண்டனி வெளியானது.

ADVERTISEMENT

ஆண்டனியாக விஷால் மற்றும் ஜாக்கி பாண்டியனாக எஸ்.ஜே.சூர்யா. இருவரும் கேங்க்ஸ்டர் நண்பர்கள். மற்றொரு கேங்க்ஸ்டர் ஏகாம்பரமாக தெலுங்கு நடிகர் சுனில் , டைம் ட்ராவல் தொலைபேசியை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி சிரஞ்சீவியாக இயக்குநர் செல்வராகவன் நடித்திருக்கிறார்கள்

கேங்க்ஸ்டர் கதைக்குள் டைம் ட்ராவலை நுழைத்து காட்சிகளை முன்னும் பின்னுமாக களைத்துப்போட்டு சோர்வில்லாத திரைக்கதையைக் கொண்டு நகர்த்தியிருக்கும் மார்க் ஆண்டனி விஷால் ரசிகர்களை மட்டுமல்லாது பொதுவான சினிமா பார்வையாளர்களையும் கவர்ந்திருக்கிறது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

ADVERTISEMENT

“படத்தில் இடம் பெற்றுள்ள ‘பஞ்சு மிட்டாய் சேல கட்டி’, ‘வருது வருது விலகு விலகு’,
‘கண்ணை நம்பாதே’ போன்ற பழைய பாடல்களை ரெஃபரன்ஸாக வைத்திருக்கும் காட்சிகள், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வாலி’ அவர் நடித்த முதல் படமான அமராவதி படங்களை குறிப்பிட்டு பேசுவது,

‘ஒருதலை ராகம்’ போஸ்டர், ‘அனகோன்டா’ துப்பாக்கி, எல்லாவற்றையும் தாண்டி சில்க் ஸ்மிதாவின் ரீகிரியேஷன் காட்சிகளில் சிரிப்பலையும், கைதட்டல்களும் திரையரங்கை அதிரவைக்கிறது” என்கிறார் மார்க் ஆண்டனி திரையிடப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் கார்த்திக் திரையரங்க மேலாளர் மணி.

டைட்டில் கார்டில் ‘நடிப்பு அரக்கன்’ என எஸ்.ஜே.சூர்யாவின் பெயருக்கு முன்னால் ஒரு பட்டம். உண்மையில் அத்தனைக்கும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவரின் தனித்துவமான உடல்மொழி, குரலில் காட்டும் ஏற்ற இறக்கம், அப்பா – மகன் உரையாடல், நகைச்சுவையுடன் கூடிய வில்லத்தனம், மூச்சுவிடாமல் பேசுவது என பார்வையாளர்களை அசரடித்திருக்கிறார் என்கிறது தியேட்டர் வட்டாரம்

படத்தின் மற்றொரு கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் என கூறலாம் திரையரங்கை தெறிக்கவிடும் பின்னணி இசையில் மிரட்டுவதுடன், ‘ஆண்டனி டா’ என டி.ராஜேந்தர் குரலில் ரசிக்க வைக்கும் பாடல் ஒன்றையும் கொடுத்துள்ளார் என்கிறார் திருமங்கலம் மீனாட்சி திரையரங்க மேலாளர் முத்துப்பாண்டி.

ABC என அனைத்து சென்டர்களிலும் ஆரவாரத்துடன் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் திரைப்படமாக மார்க் ஆண்டனி உள்ளது என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்விடுமுறை நாட்கள் மார்க் ஆண்டனி கல்லாகட்டும் என்பதுடன் கதாநாயகனுக்கு இணையான வில்லன் நடிகர் இருந்துவிட்டால் அந்தப்படம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதற்கு மார்க் ஆண்டனி மிக சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது.

தமிழ் திரைப்படங்களில் ஆளுமைமிக்க வில்லன் நடிகர் இல்லை என்கிற குறையை எஸ்.ஜே.சூர்யா தனது அசுரத்தனமான நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தால் போக்கியிருக்கிறார்.

இராமானுஜம்

“அதிகாரிகல அமலாக்கத் துறையில சேர சொல்லுங்க” : அப்டேட் குமாரு

மார்க் ஆண்டனி படம் எப்படி? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share