ஒரு கமர்ஷியல் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், என்னமாதிரியான படங்கள் வெற்றி பெறும் என்று எவராலும் கணிக்க முடியாது. உலகம் முழுக்க இதே நிலைமைதான்.
அதையும் மீறிச் சில சங்கதிகளைச் சொல்லலாம். புதிதாக, புத்துணர்வூட்டுவதாக, களிப்பூட்டுவதாக, நெஞ்சம் நெகிழ்வதாக, அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பைத் தருவதாக, நாடி நரம்பை முறுக்கேற்றுவதாக, நமது கணிப்புகளைப் பொய்யாக்குவதாக ஒரு திரைக்கதை அமைய வேண்டும். ரசிகர்கள் ஒவ்வொருவரது விருப்பங்களையும் கணக்கில் கொண்டால், இன்னும் பல பாயிண்டுகள் சேரும்.
ஒட்டுமொத்தமாக நோக்கினால், படம் பார்த்து முடித்தபிறகு திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டும் என்பதுதான் அந்த வரிசையில் முதலும் கடைசியுமாக அமையும். அந்த திருப்தி எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். அப்படியொன்று நிச்சயம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தைத் தந்தது ‘மார்க் ஆண்டனி’ பட ட்ரெய்லர்.
விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சுனில், ரீது வர்மா, ஒய்.ஜி.மகேந்திரா, நிழல்கள் ரவி உட்படப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார்; இதனை எழுதி இயக்கியிருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
சரி, இந்த படம் நமக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைத் திரையில் தருகிறது?
டைம்மெஷின் டெலிபோன்!
கடந்த காலத்தைச் சேர்ந்தவர்களோடு பேசும் டைம்மெஷின் டெலிபோன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி சிரஞ்சீவி (செல்வராகவன்). அந்த மகிழ்ச்சியோடு, அதனை எடுத்துக்கொண்டு ஒரு கிளப்புக்கு காரில் செல்கிறார்.
அந்த கிளப்பில் ஏகாம்பரம் (சுனில்) என்பவர் ஆண்டனியை (விஷால்) சுட்டுக் கொல்கிறார். அந்த சம்பவத்தில் சிரஞ்சீவியும் காயமுறுகிறார். தனது கண்டுபிடிப்பு மூலம் நடந்ததை மாற்ற முயற்சிக்கிறார் சிரஞ்சீவி. ஆனால், அதற்குப் பலன் கிடைக்காமல் போகிறது. கூடவே, அவரும் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைகிறார்.
ஆண்டனி மரணத்தை அடுத்து, அவரது நண்பன் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) கும்பலுக்கும் ஏகாம்பரம் கும்பலுக்கும் மோதல் அதிகமாகிறது. ஜாக்கியின் கை ஓங்க ஏகாம்பரம் என்னவானார் என்பதே தெரியாமல் போகிறது. அதன்பிறகு, ஆண்டனியின் மகன் மார்க்கை (இன்னொரு விஷால்) வளர்த்து வருகிறார் ஜாக்கி. தனது மகன்களைக் காட்டிலும் அவருக்கு முக்கியத்துவம் தருகிறார்.
ஜாக்கியின் மூத்த மகன் மதனுக்கு (இன்னொரு எஸ்.ஜே.சூர்யா) இது எரிச்சலைத் தருகிறது. தந்தையைக் கொன்றுவிட்டு, அவர் அந்த இடத்தை அடைய வேண்டுமென்று நினைக்கிறார். அதேபோல, மார்க் – ரம்யா (ரீது வர்மா) காதலும் அவரை இம்சிக்கிறது. ஏனென்றால், ரம்யாவை ஒருதலையாகக் காதலிக்கிறார் மதன்.
இந்த நிலையில், திடீரென்று சிரஞ்சீவி கண்டுபிடித்த ‘டைம்மெஷின் டெலிபோன்’ மார்க் கையில் கிடைக்கிறது. தனது தந்தை ஆண்டனி கெட்டகுணங்களைக் கொண்டவர்; அவர்தான் தன் தாய் வேதாவைக் (அபிநயா) கொன்றவர் என்ற எண்ணங்களே இதுநாள்வரை அவர் மனதில் நிறைந்திருக்கிறது. ஆனால், அந்த டெலிபோன் அவற்றை அடியோடு மாற்றுகிறது.
தந்தை நல்லவர் என்றும், தாயைக் கொன்றது அவரல்ல என்றும் தெரிய வருகிறது. அப்படியென்றால், நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம்? அந்த ஏகாம்பரம் என்னவானார்? இந்தக் கதையில் ஜாக்கியின் பங்கு என்ன என்று சொல்கிறது ‘மார்க் ஆண்டனி’யின் மீதி.
மொத்தப்படமும் சில கதாபாத்திரங்களைக் கொண்டு இயக்குனர் நிகழ்த்தும் ஒரு ’கால விளையாட்டாக’ அமைந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘டைம்மெஷின் டெலிபோனை’ பார்த்துவிட்டு, ‘என்னய்யா கலர் கலரா ரீல் விடுறீங்க’ என்று கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பவர்கள் இப்படத்தைப் பார்க்கக் கூடாது. அதுதான் இப்படத்தைப் பார்ப்பதற்கான நிபந்தனை.
’ஓவர் ஆக்டிங்’ சூர்யா!
எண்பதுகளுக்கு முன்னால், ரஜினி வில்லனாக நடித்துக் கொண்டிருந்தார். அவர் திரையில் தோன்றியபோது, ரசிகர்கள் எத்தகைய வரவேற்பைத் தந்தார்கள்? இன்றைய தலைமுறைக்கு அது தெரியாது. அதனை அறிய, ‘மார்க் ஆண்டனி’யில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைப் பார்த்தால் போதும். அதற்காக, ரஜினியை அவர் அப்படியே ‘இமிடேட்’ செய்திருப்பதாக நினைக்க வேண்டாம். ஆனால், அதே ‘வில்லன் அந்தஸ்து’ தனக்கும் கிடைக்க வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
அனைத்து காட்சிகளிலும் ‘எக்சண்ட்ரிக்’ ஆக தோன்றி ’ஓவர் ஆக்டிங்’கை கொட்டியிருக்கிறார். கூடவே, ‘பாட்ஷா’வில் ரகுவரன் வெளிப்படுத்திய வில்லக்குரலை எடுத்தாண்டிருக்கிறார். அவர் என்ன செய்தாலும், நம்மை ரசிக்க வைக்கிறார் என்பதுதான் சிறப்பு.
விஷாலுக்கு இதில் இரட்டை வேடம். அதில் என்ன இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கே படம் முழுக்கத் தோன்றியிருக்கிறார். ஆனால், கிளைமேக்ஸில் அவர் மொட்டைத்தலையோடு தோன்றி ‘லகலக..’ எனும்போது தியேட்டரே அதிர்கிறது. அந்த நடிப்புதான் அவரது தனித்துவம் என்று யாராவது அவரிடம் எடுத்துச்சொன்னால் நல்லது.
முழுக்க எஸ்.ஜே.சூர்யாவும் விஷாலும் ஆக்கிரமித்தபிறகு, மற்ற நடிகர் நடிகைகளுக்கு என்ன மீதமிருக்கும்? அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிடைத்த கேப்பில் செல்வராகவனும் சுனிலும் ‘சிக்சர்’ அடித்திருக்கின்றனர். செல்வராகவனுக்கு முதல் சில நிமிடங்கள் என்றால், இடைவேளைக்குப் பிறகான சில நிமிடங்களை சுனில் வரித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து ஒய்.ஜி.மகேந்திரா, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அடியாட்களாக திரையில் தோன்றியவர்கள் மட்டும் ஐந்தாறு டஜனுக்கு மேலிருப்பார்கள்.
இந்தக் கதையில் பெண் பாத்திரங்களுக்குப் பெரிதாக இடமில்லை. அதையும் மீறி, விஷாலின் தாய் ஆக நடித்துள்ள அபிநயா நம் மனம் கவர்கிறார். நாயகியாக வந்துள்ள ரீது வர்மாவுக்கு இரண்டு பாடல்கள், சில காட்சிகள் கிடைத்துள்ளன. ஆனாலும், அது நமக்கு நிறைவைத் தருவதாக இல்லை. அனிதா சம்பத், மீரா கிருஷ்ணன் இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டுகின்றனர். இவர்களனைவரையும் விட, ஒரே ஒரு காட்சியில் நடிகை சில்க் ஆகத் தோன்றிய விஷ்ணுபிரியா காந்தி ரசிகர்களின் ஆரவாரத்தை அள்ளுகிறார்.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, ஆர்.கே.விஜய்முருகனின் கலை வடிவமைப்பு, சத்யா என்.ஜே.வின் ஆடை வடிவமைப்பு என்று தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு ஒன்றுசேர்ந்து, எண்பதுகளில் வெளியான திரைப்பட பிலிம் ரீலுக்குள் நம்மைத் தள்ளிவிட்ட அனுபவத்தைத் தருகிறது. ஒப்பனை, நடனம், சண்டைப்பயிற்சி, ஒலிப்பதிவு என்று ஒவ்வொரு துறையிலும் பணியாற்றியவர்கள் மிகவும் ரசித்து ருசித்து உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.
எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸில் விஷால் வரும் பகுதியை ரசித்து ரசித்து இழைத்திருக்கிறார் விஜய் வேலுகுட்டி. இப்படியொரு கதையையும் காட்சியமைப்பையும் கொண்ட படத்தைச் சிக்கலின்றி கோர்ப்பது எளிதல்ல; அதனைச் சாதித்திருக்கிறது அவரது படத்தொகுப்பு.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை தியேட்டரில் ஆரவாரம் அதிகமாக முக்கியக் காரணமாக விளங்குகிறது. அதிலும் ‘அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி’, ‘பஞ்சுமிட்டாய் சீலை கட்டி’ பாடல்களைப் பயன்படுத்தியிருக்கும் விதம் அருமை. அதே அளவு உற்சாகத்தைப் பாடல்கள் தரவில்லை.
எது கவரும்?
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் வெளியானபோது, திரையுலகின் கவனம் ஆதிக் ரவிச்சந்திரன் பக்கம் திரும்பியது. ஒரு வித்தியாசமான கதை சொல்லல் அவரிடம் இருப்பதாக நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அடுத்த படமான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ அப்படியே எதிர்மாறாக அமைந்தது. இரண்டுக்கும் நடுவே ஓர் இடத்தைப் பிடித்தது, மூன்றாவதாக வந்த ‘பஹீரா’. அம்மூன்றிலும் பெண்களைக் கண்ணியமாகத் திரையில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது படிந்தது.
’மார்க் ஆண்டனி’யில் தன் கையை விட்டு நழுவிய அந்த லகானை இறுகப் பிடித்திருக்கிறார் ஆதிக். இதிலும் அதிகம் பெண் பாத்திரங்கள் இல்லை. அதேநேரத்தில், ’இளைஞர்களை ஈர்க்கிறேன் பேர்வழி’ என்று வம்படியாக ‘ஆபாசத்தை’ திணிக்கவில்லை.
எஸ்.ஜே.சூர்யா இடம்பெறும் காட்சிகளில் கூட மிகக்கவனமாக வசனங்களைக் கையாண்டிருக்கிறார். அதனால், ட்ரெய்லரில் இருந்த சில வார்த்தைகள் படத்தில் இல்லை. இதே நாசூக்கை, அவர் அடுத்த படங்களிலும் தொடர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
முக்கியமாக, நடிகை சில்க் இடம்பெறுவதாக ஒரு காட்சியைத் திரையில் அமைத்திருக்கிறார். அதில், அவரது புகழைக் களங்கப்படுத்தாத அளவுக்கு அக்காட்சி அமைந்திருப்பதற்குப் பாராட்டுகள்.
இந்த படத்தில், ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என்று யோசித்து யோசித்து ஆதிக் ரவிச்சந்திரன் திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார்; காட்சியாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். எப்போதும் அந்த உழைப்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஒரே கோட்டில்தான் அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை. சில நேரங்களில் அது பொய்க்கலாம். அதற்காக, எல்லை தாண்டி ரசிகர்களை இழுத்துச் சென்றுவிடக் கூடாது. அதைக் கடைப்பிடித்து, முந்தைய மூன்று படங்களில் தவறவிட்டதைப் பிடித்திருக்கிறார் ஆதிக்.
தேடிப் பார்த்தால், இப்படத்தில் ‘லாஜிக் மீறல்கள்’ நிறைய கண்டுபிடிக்கலாம். ஆனால், தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் மகிழும்படியான ஒரு ‘எண்டர்டெயினர்’ தர வேண்டும் என்பதே இயக்குனரின் நோக்கமாக அமைந்துள்ளது. ஆதலால், அது ‘க்ளீனாக’ இருக்கிறதா என்று பார்ப்பதே சரியானது. அந்த வகையில், ட்ரெய்லரில் நாம் அடைந்த உணர்வைத் திரையிலும் ஏறக்குறைய மீளாக்கம் செய்திருக்கிறார் ஆதிக். அதற்காகவே, மார்க் ஆண்டனி காட்டும் புதிய உலகத்திற்கு ‘வெல்கம்’ சொல்லலாம்.
உதய் பாடகலிங்கம்
பரவும் டெங்கு… சென்னை குடிநீர் தரம் என்ன? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை