தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த வந்த பிரபல யூடியூபர் மாரிதாஸ் இன்று (ஜூன் 8) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது கைதுக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் எக்ஸ் பதிவில், யூட்யூபர் திரு.
மாரிதாஸ் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர்
ED -யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Master mind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா அவர்களே… ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?
அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் திரு. மாரிதாஸ் அவர்களை தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா?
ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, கைது செய்யப்பட்ட திரு. மாரிதாஸ் அவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது!” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக மூத்த தலைவர் தமிழிசை தனது எக்ஸ் பதிவில், “தற்போதைய தவெக அரசின் முறைகேடுகளையும், தோல்விகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் மாரிதாஸ் கைதுக்கு எனது பலத்த கண்டனங்கள்! அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கும் குரல்களை ஒடுக்குவது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கு எதிரானது. கருத்துச் சுதந்திரத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும்; வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட வேண்டுமே தவிர, அதைச் சுட்டிக்காட்டுபவர்களை இலக்கு வைக்கக் கூடாது.
இருப்பினும், பெண்களுக்கு எதிரான எந்தவொரு அவதூறான கருத்துகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் பெண்மையைக் கண்ணியத்தோடும், நெறிமுறையோடும் மதிக்க வேண்டும். ஒரு பெண் தலைவராக, பெண்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியத்திற்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்.” என தெரிவித்துள்ளார்.
