சமீபத்தில் இளைஞர்கள் சிலர் கஞ்சாபோதையில் ரெயிலில் பயணித்த வடமாநில இளைஞரை கடத்தி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் வலியுறுத்தி உள்ளார்.
வட மாநிலத்தைச் சேர்ந்தவர் சுராஜ். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தவர் மின்சார ரயிலில் திருத்தணி நோக்கி சென்றுள்ளார். அப்போது 17 வயதிற்குட்பட்ட 4 சிறார்கள் சுராஜை கத்தியை காட்டி மிரட்டுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதை சுராஜ் தடுத்த நிலையில் சிறார்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வரை டேக் செய்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை மின்சார இரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
