”பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை” : அஜித் பவார் பளீர்!

Published On:

| By christopher

மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தற்போது பாஜக – ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி இடையேயான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே மஹாராஷ்டிரா மாநில கல்வி பாடத்திட்டத்தில் ‘மனுஸ்மிருதி’ வசனங்கள் இடம்பெற அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் அஜித் பவார் என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர் துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ”பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியில் இருந்து எந்த வசனமும் சேர்க்கப்படவில்லை. மாநிலத்தில் அப்படி எந்த முயற்சியும் செய்ய முடியாது. மனுஸ்மிருதியை மாநில அரசு ஆதரிக்கவில்லை.

மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி ஃபுலே ஷா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் போன்றோர் பிறந்த பூமி இது. அவர்களின் முற்போக்கான சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்றுள்ளது. எனவே மனுஸ்மிருதி போன்ற பிரச்னைகளுக்கு மகாராஷ்டிராவில் இடமில்லை.

மனுஸ்மிருதி வசனங்களை சேர்க்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்.  இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்” என்று அஜித் பவார் அறிவுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஓசூரில் விமான நிலையம், திருச்சியில் நூலகம்: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

’கல்கி 2898 ஏடி’ ரிலீஸ் : உருக்கமான அறிக்கை வெளியிட்ட வைஜெயந்தி மூவீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share