விஜயகாந்த் பிறந்தநாளான இன்று அவர் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்குநர்கள் பேரரசு, செல்வமணி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை (இன்று ஆகஸ்ட் 25) அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இன்று சுமார் 10 ஆயிரம் பேருக்கு தேமுதிக தலைமை உணவு தயார் செய்து, விஜயகாந்த் நினைவிடத்துக்கு வருபவர்களுக்கு பரிமாறி வருகிறது.
இதற்கிடையே விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் கடந்த 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1000க்கும் அதிகமான திரையரங்களில் 4கே தரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
சென்னையில் ஞாயிற்று கிழமையான நேற்று பெரும்பாலான திரையரங்களில் இந்த படம் ஹவுஸ்புல். விஜயகாந்த் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ரீரிலிஸில் சுமார் 1.25 கோடி ரூபாய் கேப்டன் பிரபாகரன் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தை, விஜயகாந்தின் பிறந்த நாளான இன்று இயக்குநர் பேரரசு, இயக்குநர் செல்வமணி, மன்சூர் அலிகான் மற்றும் பல நடிகர்கள் ஒன்றாக சேர்ந்த வடபழனியில் உள்ள திரையரங்கில் பார்த்தனர்.
அப்போது ‘ஆட்டமா… தேரோட்டமா…’ பாடல் காட்சி ஒளிபரப்பானதும் குஷியான இயக்குநர் பேரரசு அருகில் அமர்ந்திருந்த மன்சூர் அலிகானை எழுப்பிவிட்டு நடனமாடினார். தொடர்ந்து மன்சூர் அலிகானும் எழுந்து ஆட்டம் போட்டு வைப் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
