ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் ஷியாமளன் பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 6)
மஞ்சள் நிற லீகல் நோட்டு புத்தகத்தை எங்கேயாவது கண்டால் அப்படியே விட்டு விடாதீர்கள், எடுத்து படித்து விடுங்கள். அதில் இப்படி எல்லாம் கூட எழுதப்பட்டு இருக்கலாம்.
“இரு குழந்தைகளுடன் கடற்கரைக்கு செல்லும் தம்பதி ஒரு மணி நேரத்திற்கு பின் தன் குழந்தைகளைக் காணாமல் தேட, வளர்ந்த பிள்ளைகளாக அவர்களை கண்டடைகின்றனர்.
கடற்கரையில் இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் காலம் ஆண்டுக்கணக்கில் ஓடுகிறது. நான்கு வயது குழந்தை வளர்ந்து தாயாகிறாள், ஒருத்தி வயிற்றில் கேன்சர் கட்டி ஒரு நிமிடத்தில் வளர்ந்து முற்றுகிறது”
“விண்வெளிப்பயணத்தில் இருக்கும் ஏராளமான மனிதர்களைக் கொண்ட விண்கலம் விபத்துக்குள்ளாகி எதோ ஒரு பெயர் தெரியாத கிரகத்தில் விழுக அதில் பயணித்த அப்பா தன் மகனை எச்சரிக்கிறார், ” இப்போது நாம் வந்திருக்கும் இடம் பிரபஞ்சத்தின் மிக ஆபத்தான காலநிலையையும் மனிதர்களை கொல்வதற்காகவே பரிணமித்த விலங்குகளையும் கொண்ட உயிர்க்கொல்லிக் கிரகம், இதன் பெயர் பூமி” என்று சொல்ல கேமரா பின்னோக்கி செல்கிறது. நாம் எதிர்கால பூமியைப் பார்க்கிறோம்”
“மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸாடர் என அறியப்படும் DID (Dissociative Identical Disorder) எனப்படும் மனநல சிக்கல் கொண்ட ஒருவன் இருபத்தி மூன்று மனிதர்களின் இயல்பைக் கொண்டிருக்கிறான். மன நலம் குன்றிய அம்மனிதன் தன் இருபத்தி நான்காவது பர்சனாலிட்டியில் சூப்பர் ஹீரோவாக உயிர்த்தெழுகிறான்”

இதை நீங்கள் படித்து விட்டு திரும்பும் போது மற்றுமொரு நோட்பேட் இருந்தால் அதிலும் நீங்கள் தமிழ் நாட்டிலோ கேரளத்திலோ இருந்தால் அவசியம் படிக்க வேண்டும். அதிகபட்சமாக அதில் என்ன இருக்கப் போகிறது என்று கேட்டால், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் அதில் தன் அடுத்த திரைக்கதையை இதோ இப்போது படித்தீர்களே அப்படி எழுதிக் கூட வைத்திருக்கலாம்,
இப்படி மஞ்சள் நிற லீகல் நோட் பேடில் தன் எந்தவொரு திரைக்கதையையும் எழுதும் சம்பிரதாயம் ஷியாமளனுக்கு உண்டு.
தன் தனித்துவமான திருப்புமுனைகள் கொண்ட கதைகளாலும், அமானுஷ்யங்களைக் கொண்ட கதைக்களங்களைக் சிறப்பாக கையாள்வதிலும் புகழ்பெற்ற ஹாலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குனர்,மனோஜ் நைட் ஷியாமளன் ஒரு தென்னிந்தியர். தாய் வழியில் ஒரு தமிழர்.
நைட் ஷியாமளனின் முழுப் பெயர் மனோஜ் நெலியாட்டு ஷியாமளன். மலையாளியான இவரின் தந்தை நெலியாட்டு ஷியாமளன் ஒரு நரம்பியல் மருத்துவர், அம்மா ஜெயலட்சுமி கைனகாலஜி படித்த சென்னையில் பிறந்த தமிழ் மருத்துவர்.
ஷியாமளன் குடும்பத்தின் பூர்வீகமான முன்னாள் பிரெஞ்சு காலனிய பகுதி மாஹே, பாண்டிச்சேரியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. எனினும் புவியியல் ரீதியாக கேரளத்தில் அமைந்துள்ளது. மாஹேவில் இருந்து அவரின் குடும்பம் மனோஜ் பிறந்தவுடன் அமெரிக்காவின் பென்சில்வேனியா விற்கு குடிபெயர்ந்தனர்.
மாஹேவில் பிறந்து அமெரிக்க குழந்தையாகவே ஷியாமளன் வளர்ந்தார்.
உயர்கல்வி படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வார இறுதியில் சூப்பர் 8 எனப்படும் 8mm ஃபிலிம் கேமராவை மட்டும் வைத்துக்கொண்டு நண்பர்களை நடிக்க வைத்தும், தானே நடித்தும் மனோஜ் எதாவது ஒரு களேபரத்தை செய்து கொண்டிருப்பார்.
தங்களைப்போலவே தன் மகனையும் மருத்துவராக்க நினைத்துக் கொண்டிருந்த அப்பாவிற்கு பதின்பருவ மனோஜின் செய்கைகள் பதட்டத்தைக் கொடுத்தது. இப்படி தன் மகன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என அவன் எதிர்காலம் குறித்த குழப்பத்தில் இருந்தவர் தன் வீட்டில் அன்று 45 தனித்தனி குறும்படங்களின் டிவிடிக்களை கண்டபோதும் அத்தனையும் உயர்கல்வி கூட இன்னும் முடித்திராத தன் மகன் மனோஜ் ஷியாமளனால் கதை எழுதப்பட்டு படமாக்கி தொகுக்கப் பட்டவை என்று தெரிந்து கொண்ட போதும் அவருக்குள் ஒரு குரல் கேட்டிருக்கத்தானே செய்யும். “இனி இவன் மருத்துவனின் மகனல்ல..நீ தான் ஒரு இயக்குனரின் தந்தை”
பிற்பாடு ப்ரூஸ் வில்லிஸ், வில் ஸ்மித், ஆக்வின் ஃபீனிக்ஸ், மெல்கிப்சன், சாமுவேல் ஜாக்சன் என பெரும் ஜாம்பவான்களுடன் பணி புரிந்த ஷியாமளன் அந்த நாற்பதைந்து குறும்படங்களிலிருந்து சில காட்சிகளை அவ்வபோது எடுத்து பயன்படுத்திக்கொண்டார்.
நியுயார்க் யுனிவர்சிட்டியின் மெரிட் பிரிவில் தேர்ச்சியடைந்த மனோஜ் ஷியாமளன் கேமராவை எடுத்துக் கொண்டு நேராய் சென்றிறங்கிய இடம் தமிழ்நாடு. ஆம், தன் முதல் முழு நீள சுயாதீன படத்தை சென்னையில் படம் பிடித்தார்.

சொற்ப செலவில் முதல் முயற்சியாய் அவர் எடுத்த படம் தான் “ப்ரே ஃபார் ஆங்ரி” . அத்திரைப்படம் ஒரு அமெரிக்க இந்தியன் தன் தாய்நிலமான சென்னைக்கு வந்து அங்கு அடையும் உறவுகளையும் ஆன்மீக சலனங்களையும் பேசும் படமாக உருவானது. அதில் ஷியாமளனே இயக்கி, தயாரித்து நடித்தும் இருப்பார். அதன் முதல் இரண்டு நிமிடங்கள் கேமரா காட்டும் சென்னையின் அழகும், படத்தொகுப்பும் ஷியாமளனின் அழகியல் ரசனையை எடுத்துக்கூறுபவையாக இன்றும் இருக்கின்றன. சில திரைப்பட விழாக்களை தவிர வேறெங்கும் இப்படம் திரையிடப்படவில்லை.
இரண்டாவதாக அவர் எடுத்த வைட் அவேக் திரைப்படம் தாத்தாவை இழந்த சிறுவனின் கதையை நகைச்சுவை கலந்த விதத்தில் எழுதப் பட்டிருந்தது , அத்திரைப்படம் மூன்று வருடங்கள் கழித்து வெளிவந்து கவனிப்பாரற்று பெரும் தோல்வியடைந்தது.
ஷியாமளனின் முதல் பெயர் சொல்லும் வெற்றி சிக்ஸ்த் சென்ஸ். தன் அடையாளமாகவே மாறிப்போன சூப்பர் நேச்சுரல் கதையில் அபாரமான ஒரு திருப்பத்தைக் கொண்டு கதையாக்கி இருப்பார்.
1997 ல் வெளிவந்த டைட்டானிக் படத்திற்கு பிறகு ஐந்து வார முடிவில் கிட்டத்தட்ட முப்பது மில்லியன் டாலர்களை வசூலித்து அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸை அடித்து நொறுக்கிய படமாக சிக்ஸ்த் சென்ஸ் ஆனது. மொத்தமாய் இந்திய மதிப்பில் ரெண்டாயிரத்து நானூறு கோடிகளை அமெரிக்காவில் மட்டும் அள்ளியது.
மொத்தம் ஆறு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படத்திற்காக சிறந்த திரைப்படம், திரைக்கதை, சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிரிவின் கீழ் ஷியாமளன் பரிந்துரைக்கப்பட்டார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போதே ப்ரூஸ் வில்லிசுக்கு மற்றொரு கதை ஒன்றை சொல்லி இருந்தார். சூப்பர் ஹீரோ படத்திற்கான எந்த வழக்கமும் இல்லாத அந்த கதையை படமாக்கி ஒரு கட்டம் இன்னும் மேலேறி தயாரிக்கவும் செய்தார். அந்த திரைப்படம் தான் அன்பிரேக்கபிள்.
இந்த படத்திலிருந்துதான் ப்ளைண்டிங் எட்ஜ் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தன் படங்களை தயாரிக்கவும் செய்தார். சிக்ஸ்த் சென்ஸ் படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் நியுட்டன் ஹோவர்ட் இந்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்போன பொழுது அவர் அருகில் அமர்ந்தே முழு படத்திற்கும் ஸ்டோரி போர்ட் வரைந்து காட்டி, இசையை வாங்கியதாகவும் இதுவரை தனக்கு எந்த இயக்குனரும் அப்படி செய்ததில்லை என்றும் கூறிய ஜேம்ஸ் நியுட்டன் தான் அடுத்து ஷியாமளன் இயக்கிய ஆறு படத்திற்கும் இசை. ஷியாமளன் இயக்கத்தில் ஃபைண்டிங் ஃபூட்டேஜ் (Finding Footage) ஜானரில் 2015 ல் வெளிவந்த விசிட் திரைப்படத்தில் இசையே இல்லாததால் இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.
சைன்ஸ், தி வில்லேஜ் என அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு இயக்குனர் ஸ்பீல்பெர்க் ஷியாமளனின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு தன் அப்போதைய படமான இண்டியானா ஜோன்ஸ் நான்காம் பாக திரைப்படத்திற்கான திரைக்கதையில் பணியாற்ற அழைத்தார். சில காரணங்களால் ஷியாமளனால் அதில் பணியாற்ற முடியவில்லை.
தான் வளர்ந்த பென்சில்வேனியாவின் ஃபிலடெல்பியா நகரம் இல்லாத ஷியாமளனின் திரைப்படங்களைக் காண்பதரிது. அந்நகரின் பலத்தரப்பட்ட கலாச்சார நிலவியல் முகத்தை தன் படங்களில் பிரதிபலித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் அவர் படங்களில் தொடரும் மற்றொரு விஷயம் ஷியாமளன் தன் எல்லா படங்களிலும் ஒரு கேமியோ ரோலில் நடித்து விடுவார்.
2008ல் மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.
தனக்கு மிகவும் பிடித்தமான நாவலான லைஃப் ஆஃப் பை திரைப்படத்தை படமாக்க நினைத்தவர் அது நடக்காததால் இப்படி கூறினார், “என்னைப் போலவே பாண்டிச்சேரியில் பிறந்த சிறுவனின் கதை எனும் போதே அது எனக்கு நெருக்கமான கதையாகிவிட்டது ”
மாய யதார்த்தமும் , ஆன்மீகத் தேடலும் , அமானுஷ்யங்களும் தன் கதைகளின் சாராம்சமாக கொண்ட மனோஜ் நைட் ஷியாமளன் அக்கதையை படமாக்க நினைத்ததில் ஆச்சர்யமில்லை.
2006ல் தன் குழந்தைகளை தூங்கவைக்க சொல்வதற்காக தானே எழுதி உருவாக்கிய கதையையே லேடி இன் தி வாட்டர் என்ற பெயரில் படமாக எடுத்த போது வணிக ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் மாபெரும் தோல்வியடைந்தது.
தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் ஈடுகட்ட முடியாமல் தன் அடையாளமான திரில்லருக்கு திரும்ப நினைத்தவருக்கு அடுத்த கதையை படமாக்க யாரும் ஆர்வம் காட்டாததால் பெரும் இடர்பாடுகள் ஆரம்பித்தன.
இறுதியாய் 20 செஞ்சுரி ஃபாக்ஸ் உடன் இந்திய நிறுவனம் ஆன யூ டீவி சரிபாதி பட்ஜெட்டை பகிர்ந்து கொள்ள ஒருவழியாய் எடுத்து முடித்து 2008ல் வெளியான தி ஹேப்பனிங் விமர்சன ரீதியாக சறுக்கலையே இயக்குனருக்கு கொடுத்தது.
அடுத்தடுத்த அடி!
எந்த அளவுக்கு என்றால் கோல்டன் ராஸ்பெரி விருதுகள் என்று அழைக்கப்பட்டு பகடியாக வழங்கப்படும் மோசமான படம், மோசமான இயக்குனர், திரைக்கதை என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது இப்படம். சிறிய பட்ஜெட் என்பதால் வணிக அளவில் தோல்வியடையாத காரணத்தால் நிக்கலோடியனில் கார்டூன் தொடராக வெளிவந்த அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டரை படமாக்கும் வாய்ப்பு எம் நைட் ஷியாமளனுக்கு வந்தது. மாபெரும் பொருட்செலவில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2010ல் வெளியான இத்திரைப்படத்தின் முடிவு ஷியாமளனின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத விமர்சன, வணிக தோல்வியை ஏற்படுத்தியோடு பல இதழ்கள் அவருக்கு முடிவுரை எழுதி பிரியாவிடையும் கொடுத்தன.
அடுத்த மாதமே அமெரிக்க சினிமா வட்டாரத்தில் ஷியாமளன் பேசு பொருளானார், இதே நாளில்(ஆகஸ்ட் 06) ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரான வில் ஸ்மித் நைட் ஷியாமளனுக்கு அழைத்து ,பிறந்தநாள் வாழ்த்துகளோடு தான் எழுதிய கதையின் ஒரு வரியைக் கூறி நீங்கள் தான் இயக்க வேண்டும் என்றுகேட்டுக்கொள்ள . தான் அடுத்ததாக எடுக்க நினைத்து வைத்திருந்த திரைப்படத்தை அப்படியே நிறுத்தி வைத்து வில் ஸ்மித்தையும், கராத்தே கிட்டில் நடித்து பெரும்புகழ் பெற்றிருந்த அவர் மகன் ஜேடன் ஸ்மித்தையும் வைத்து படமாக்கத் தொடங்கினார்.
அழிந்த பூமியில் தவறுதலாய் மாட்டிக்கொண்ட அப்பா-மகன் கதையான இதில் உண்மையான அப்பா மகனான இருவரும் நடித்தனர். 2013ல் இப்படம் வெளியாவதற்கு முன் வரை ஷியாமளனின் படம் கோல்டன் ராஸ்பெரி விருதுகளுக்கு பரிந்துரைதான் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இம்முறை மோசமான நடிகர், துணை நடிகர் என மூன்று கேலி பட்டங்கள் இவர் படத்திற்கு வழங்கப்பட்டது
தன் திரைப்பயணத்தில் வலி நிறைந்த தோல்வியென வில் ஸ்மிதே பேட்டியில் சொல்லும் வார்த்தைகள் எங்கும் எதிரொலித்தன.
இப்படி அடுத்தடுத்த அடிகளில் சறுக்கிய யானையாக மனோஜ் நைட் ஷியாமளன் இம்முறை எங்கேயும் தன் கதையை தூக்கிக் கொண்டு செல்லவில்லை. யாரும் இவரை அழைக்கவும் இல்லை.
ஒரு கதை எழுதினார், அதில் நடிக்க தேர்வுக்கு வந்த ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியரில் இருந்து இரண்டு பேரை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு ஆயத்தமானார். அப்படியே தன் வீட்டை ஐந்து மில்லியனுக்கு அடமானம் வைத்து எடுத்துக்கொண்டு முழு பணத்தையும் அதில் மட்டுமே போட்டு படமாக்கி முடித்தார்.
மரியாதைக்குரியக் கலைஞன்

பேரானார்மல் ஆக்டிவிட்டி திரைப்படம் போன்ற ஃபைண்டிங் ஃபூட்டேஜ் (Finding Footage) வகைமையில் உருவானதால் இப்படத்தில் இசைகூட இல்லை. விடுமுறைக்கு தன் தாத்தா பாட்டியை பார்க்க செல்லும் குழந்தைகளுக்கு நடக்கும் வித்தியாசமான அனுபவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படம் 2015 ல் வெளியாகி கிட்டத்தட்ட நூறு மில்லியன் டாலரை வசூலித்தது.
கோல்டன் ராஸ்பெரி இந்த முறையும் மனோஜுக்கு ஒரு விருது வழங்கியது. அந்த விருதுக்கு தமிழில் “மரியாதைக்குரியக் கலைஞன் என்ற பெயரை மீட்டெடுத்தவர்” என்று பொருள்.
அடுத்த வருடமே இருபத்தி மூன்று பர்சனாலிட்டிகளை கொண்ட ஒருவனாக ஜேம்ஸ் மெக்வோய் நடிக்க வித்தியாசமான திரைப்படமாக ஷியாமளனின் “ஸ்பிலிட்” உருவானது. பிரதான கதாப்பாத்திரத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் மாறி மாறி வெளிபடுத்தி மெக்வாய் தன் இராட்சச நடிப்பை காட்டும் அந்தகாட்சியைக் கண்டு மிரண்டு போன ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தத்தில் 9 மில்லியனில் உருவாகிய படம் 280 மில்லியன் டாலரை வாரி இறைத்தது . தான் ஏற்கனவே புருஸ் வில்லிஸ் வைத்து இயக்கிய அன்பிரேக்கபிள் படம் நிகழும் அதே யுனிவர்சில் இந்த கதையையும் அமைத்து அடுத்து இரண்டையும் இணைக்கும் “கிளாஸ்” என்ற மற்றுமொரு வெற்றி படத்தையும் இயக்கினார்.
தன் கதைகளில் மனோஜ் நைட் ஷியாமளன் ஹீரோக்களை புஜபலம் கொண்டவனாக மட்டுமே உருவாக்குவதில்லை. ஒரு விபத்துக்குள்ளான காவலாளி, தடுக்கினாலே எலும்புகள் சுக்கு நூறாகிப்போகும் மாற்றுத்திறன் கொண்ட காமிக்ஸ் ஆர்வலன், மனநலம் குன்றிய இளைஞன் என கலவையான கதாப்பாத்திரங்களைக் கொண்டு வித்தியாசமாய் தன் சூப்பர் ஹீரோக்களைக் கையாண்டிருப்பார்.அதன் பின் வந்த இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியையே தந்தன.
யோசித்து பார்த்தால் ஒரு சிறுவனின் கனவுகள் அவனை எங்கேயெல்லாம் இட்டு சென்றன, இறக்கைகள் கொடுத்து கதை சொல்லி ஆக்கின!
தன் குழந்தைக்கு சொல்லும் கதையைத்தான் ஒரு கதை சொல்லி இந்த சமூகத்திற்கும் சொல்கிறான் , குழந்தை தூங்கி விட்ட பின்னும் கதைகள் நீள்வதன் நோக்கம் என்ன?
கனவுகளை விதைக்கத்தானே.
சிறகுகள் கத்தரிக்கப்படும் போதும் கவனக்குறைவாய் போய் முட்டி கொண்ட போதும் கனவு காண்பதை கைவிடாத அந்த பறக்கும் சிறுவனுக்கு இனி வீழ்ச்சி இல்லை என்றுணர்ந்த கலைஞன் கனவுகளை விதைக்கும் பணியை கைவிடப்போவதில்லை.
கார்த்திக் ஜீவானந்தம்
“தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை” – முதல்வர் ஸ்டாலின்
ஓபிஎஸும் இல்லை… சசிகலாவும் இல்லை… :அமமுகவுக்கு புதிய தலைவர்!
