உயிரிழந்த நடிகரும், இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. manoj bharathiraja funeral by his daughters
தனது தந்தை பாரதிராஜாவின் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ’தாஜ்மஹால்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் மனோஜ். அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும், ஏ.ஆர்.ரகுமானின் இசையும், மனோஜின் நடனமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

அதன்பின்னர், சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருசமெல்லாம் வசந்தம், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கதாப்பாத்திர வேடத்திலும் மனோஜ் நடித்தார். மேலும் ஒரு இயக்குநராக தான் அடையாளம் காணப்பட வேண்டும் என ஆசைப்பட்ட அவர், கடந்த 2023ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தான் அவருக்கு கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை 6 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது உடல் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சீமான், செல்வப்பெருந்தகை, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மனோஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதே போன்று நடிகர்கள் கவுண்டமணி, விஜய், சூர்யா, கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு, ஆகியோரும், இயக்குநர்கள் பாக்கியாராஜ், பாண்டியராஜ், செல்வமணி, பி.வாசு, வைரமுத்து, கே.எஸ். ரவிக்குமார், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினரும் அவருக்கு நேரில் வந்து கண்கலங்க அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அவரது உடல் நீலாங்கரை வீட்டில் இருந்து இன்று மாலை 4.30 மணியளவில் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. அவரது இரு மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர். இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் அனைவருமே கண்கலங்கினர். இதையடுத்து மின்மயானத்தில் மனோஜ் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு நந்தனா என்ற மனைவியும், ஆர்த்திகா மற்றும் மதிவதனி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.