தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுகங்களையும், தனது வாரிசுகளாக பாக்கியராஜ், மணிவண்ணன் போன்ற இயக்குநர்களையும் உருவாக்கியவர் இயக்குநர் பாரதிராஜா.
நடிப்புக்கு அவரது இயக்கத்தில் வெளியான படங்களை முன்மாதிரியாக கொண்டு படங்களை இயக்குவதாக தமிழ் சினிமா இயக்குநர்கள் கூறிவருகின்றனர்.
படங்கள் இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருந்த பாரதிராஜா படங்களில் நட்புக்காக நடிக்கத் தொடங்கியவர் தற்போது முழு நேர அப்பா, தாத்தா நடிகராக மாறிவிட்டார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி நட்சத்திரங்களாக உயர காரணமாக இருந்த இயக்குநர் பாரதிராஜா தனது மகன் மனோஜ் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அவரது இயக்கத்தில் மனோஜ் தாஜ் மஹால் படத்தில் அறிமுகமானார். படம் வெற்றி பெறவில்லை தொடர்ந்து அவரை வெற்றிகரமான நடிகராக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் ஷ்யாம், ரக்க்ஷனா, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ’மார்கழி திங்கள்’.
இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 13ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெற்றது.
அப்போது முதல்நாள் படப்பிடிப்பில் தன்னை நடிகனாக மகன் மனோஜ் அணுகி எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த நிகழ்வை பாரதிராஜா கூறினார்.
கனவு நிறைவேறி இருக்கிறது!
நிகழ்ச்சியில் முதலில் பேசிய கார்த்தி , “இது என் நண்பனின் மேடை . நானும் மனோஜ் பாரதிராஜாவும் ஒரே தெருவில் ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். பெரியவர்கள் யாரும் எங்களை விளையாட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.
நானும் மனோஜும் ஒரே வயது என்கிற காரணத்தால் உடனே நண்பர்கள் ஆகிட்டோம். சின்ன வயதிலிருந்து அவனுக்கு இயக்குநராவதுதான் ஆசை. ஆனால் பாரதிராஜா அங்கிள்தான் அவனை நடிக்கும்படி சொல்லிவிட்டார்.தற்போது அவன் ஆசைப்பட்ட கனவு நிறைவேறி இருக்கிறது.
முதல் படமே புது முகங்களை வைத்து மனோஜ் இயக்கி இருப்பது வரவேற்கத்தக்கது . அதுவும் பாரதிராஜா அங்கிளை வைத்து வேலை வாங்கினது அதைவிட சிறப்பு” என்றார்.
கண்கலங்கிய மனோஜ்
படத்தின் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா பேசுகையில், “இயக்குநர் ஆகவேண்டும் என்கிற என் 18 வருட போராட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் நான் இயக்குநர் ஆக ஆசைப்படும் போது என்னை நடிக்கும்படி அப்பா வற்புறுத்தினார். அப்போது எனக்கும் அப்பாவுக்கும் 5-6 மாதங்கள் சண்டையாக இருந்தது.
அதன் பிறகு என் நடிப்பில் தாஜ்மஹால் திரைப்படம் வெளியாகி சில ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு பேர் வாங்கின நடிகனாக நான் உருவாகவில்லை. தொடர்ந்து போராடி இப்போதுதான் நான் ஆசைப்பட்டபடி இயக்குநர் ஆகியிருக்கேன்.
இந்த படத்தில் முதல் நாள் ஷூட்டிங்கின்போது என் அப்பாவுக்கு சீன் சொல்லிக் கொடுத்தேன்.
‘என்னடா என்னை பழி வாங்குறீயா?’ என்று கேட்டார். படத்தில் அவர் அருமையாக நடித்திருக்கிறார். புதுமுக நடிகர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். என் மனைவி , அம்மா எல்லாருக்கும் என் மேல் பெரும் நம்பிக்கை இருந்தது. என்னை சுற்றி இருக்கும் பாசிட்டிவிட்டி அவர்கள் தான்” என்று சொல்லி மனோஜ் கண்கலங்கினார்.
இராமானுஜம்