மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூன் 21) உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே அமைந்துள்ள மாஞ்சோலை பகுதி ஒரு சுற்றுலா தலமாகும். இங்குள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் லிமிடெட் என்ற தனியார் தேயிலைத்தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது. இந்தக் குத்தகை 2028ஆம் ஆண்டு முடிவடையும்.
அந்த பணிகளுக்காக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் 5 தலைமுறையாக இங்கேயே தங்கி கூலி வேலை வருகிறார்கள்.
இந்த நிலையில் குத்தகை காலம் முடியும் தருவாயில் அந்த தனியார் நிறுவனம் அங்கிருந்து வெளியேற திட்டமிட்டு, தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்து ஜூன் 14ஆம் தேதிக்குள் அனைத்து தொழிலாளர்களும் கையெழுத்திடவேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறது.
மேலும் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி தேயிலை தோட்டத்தில் இருந்து அனைத்து தொழிலாளர்களும் வெளியேற வேண்டும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. மத்திய மற்றும் மாநில அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையடுத்து, இன்று (ஜூன் 21) மாஞ்சோலை தொழிலாளர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையில் தமிழக மூத்த வழக்கறிஞர் ஆஜராகி, “மாஞ்சோலை தோட்ட பணியாளர்களை தமிழக அரசு அவர்களை எந்தவித தொந்தரவு செய்யவில்லை. தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலை தான் அவர்களை வெளியேற வலியுறுத்துகிறது” என வாதிட்டார்.
இதைக்கேட்ட நீதிபதிகள் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், “மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மாஞ்சோலை தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து தமிழக அரசும், தோட்ட நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை மாஞ்சோலை தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற கூடாது. தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை தேயிலை நிறுவனம் வழங்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…