எடை குறைப்பு ‘அட்வைஸ்’களால் அவதி – பிரபல நடிகை சொன்ன ஷாக் சேதி!

Published On:

| By uthay Padagalingam

manjma mohan open up on her fat issue

’நான் அழகா இருக்கேனா’ என்ற கேள்வியைத் தன்னகத்தே கொண்டவர்கள் தற்போது பல்கிப் பெருகி வருகின்றனர். சாதாரண மனிதர்களில் இப்படியொரு மாற்றம் நிகழ்கிறபோது, பிரபலங்கள் அக்கேள்வியை எதிர்கொள்ளும்விதத்தைத் தனியே சொல்லத் தேவையில்லை. அதற்கான பதிலால் திருப்தியுறாதபோது, அவர்களை நோக்கி வருகிற கேலி, கிண்டல் மற்றும் மன உளைச்சலின் அளவு ‘எதிர்பாராததாக’ இருக்கும். ‘அப்படியொரு பிரச்சனையை நானும் ஒரு காலத்தில் எதிர்கொண்டிருக்கிறேன்’ என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சொல்லியிருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன்.

கௌதம் கார்த்திக்கின் மனைவியான இவர் தமிழில் ‘சத்ரியன்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘தேவராட்டம்’ உட்படச் சில படங்களில் நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

குழந்தை நட்சத்திரமாக நடித்த மஞ்சிமா, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மலையாளப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். அப்போது முதலே, ‘நீங்க கொஞ்சம் வெயிட் குறைச்சா நல்லாயிருக்கும்’ என்று ஸ்டைலிஸ்ட்கள், டைரக்டர்கள், ரசிகர்கள் என்று பலதரப்பட்டவர்களிடம் இருந்து ‘அட்வைஸ்’களை எதிர்கொண்டு வருகிறார். தற்போது அவை குறித்து துளியும் கவலைப்படுவதில்லையாம்.

ஆனால், ஆரம்ப காலத்தில் அதனால் மனதளவில் ‘பயங்கரமாக’ப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

அதனால், அறுவைச்சிகிச்சை மூலமாக எடையைக் குறைக்க முடியுமா என்றறியச் சில மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.

“அந்த நேரத்துல எப்படியாவது வெயிட்டை குறைச்சா போதும்னு யோசிச்சிருக்கேன்” என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மஞ்சிமா.

ADVERTISEMENT

“சினிமாங்கறது என்னோட வாழ்க்கையில ஒரு பகுதி தான். ஒருவேளை நான் வெயிட் குறைச்சிருந்தா, சில நல்ல பாத்திரங்கள் எனக்கு கிடைச்சிருக்கலாம். அதைத் தாண்டி யோசிச்சா, என்னை பத்தி இவங்க யாருமே கவலைப்பட மாட்டாங்கன்னு புரிஞ்சுது. நடிக்கறதைத் தாண்டியும் எனக்கு சில லட்சியங்கள் இருக்குது. அந்த சிந்தனை வந்தப்புறம் வெயிட் பத்தி கவலைப்படவே இல்ல” என்றிருக்கிறார்.

மேற்சொன்ன பேட்டியில், தனக்கு ‘பிசிஓடி’ பிரச்சனை இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார் மஞ்சிமா. பிசிஓடி என்பது ஒரு ஹார்மோன் கோளாறு என்பதும், அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் மாதவிடாய் முதல் கருவுறுதல் வரை பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதும், சமீப ஆண்டுகளில் இதனால் இளம்பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் மருத்துவ உலகம் நமக்குச் சொல்லும் சேதி.

பிசிஓடி பிரச்சனையை எதிர்கொள்வதில் தான் சவாலைச் சந்தித்ததாகவும் கூறியிருக்கிறார் மஞ்சிமா.

மேற்சொன்ன பிரச்சனை நமது உணவுப்பழக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் விளைவது. அதனை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதுதான் மூலமாகப் பதின்ம வயதுப் பெண்கள் மத்தியில் ‘பிசிஓடி’ பற்றி தேடலை மஞ்சிமா விதைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share