கலவரம் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று பிரதமர் மோடி ஏன் பார்வையிடவில்லை என்று காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் பேசும்போது “மணிப்பூர் குறித்து பேசாமல் இருக்க பிரதமர் மோடி மெளன விரதம் மேற்கொண்டுள்ளார். அவரது மெளன விரதத்தை கலைக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மூன்று கேள்விகளை அவர் முன்பாக நாங்கள் முன்வைக்கிறோம். மணிப்பூர் மாநிலத்தை இதுவரை அவர் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசுவதற்கு ஏன் 80 நாட்கள் ஆனது. அவர் பேசியபோது கூட 30 வினாடிகள் மட்டும் தான் பேசினார். மணிப்பூர் முதல்வரை பிரதமர் மோடி ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை. மணிப்பூரில் பாஜக அரசின் இரட்டை இன்ஜின் அரசு தோல்வி அடைந்துள்ளது என்பதை அவர் உணர வேண்டும்.
அதனால் தான் மணிப்பூரில் 150 பேர் இறந்தனர். 5000 வீடுகள் எரிக்கப்பட்டன. 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். 6500 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைதி நல்லிணக்கத்தை பேண வேண்டிய முதல்வர் பதற்றத்தை உண்டாக்கும் நடவடிக்கையை தூண்டிவிட்டார். அதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் யார் வெற்றி பெறுகிறார் என்பது அல்ல. மணிப்பூருக்கான நீதி கிடைப்பதில் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
