ADVERTISEMENT

அர்ஜுன் தாஸை போல பேச முடியவில்லை – வருத்தப்பட்ட மணிகண்டன்

Published On:

| By uthay Padagalingam

manikandan said he couldnt speak like arjun das

தமிழ் திரையுலகில் சீரான, விரைவான வளர்ச்சியைப் பெற்று வருகிற பிரபலங்களில் ஒருவர், நடிகர் மணிகண்டன். வெவ்வேறுபட்ட பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து, அப்படங்களின் வழியே தனக்கென்று ‘தனிப்பட்ட’ ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர். பட புரோமோஷன் நிகழ்ச்சிகள் தாண்டி வேறு சினிமா நிகழ்ச்சிகள், பேட்டிகளிலும் இவரது பேச்சு ஈர்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அவரது பேச்சில் இருக்கும் யதார்த்தம், ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமானதாக மாறும். கூடவே, திரையுலகில் இருக்கும் பல பிரபலங்களை அவருக்கு நெருக்கமானதாகவும் அவை மாற்றவல்லவை.

‘அதுவே உண்மை’ என்பதாக ‘பாம்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் மணிகண்டன் பேச்சு அமைந்தது.

ADVERTISEMENT

இவ்விழாவில் பேசியபோது, ‘பாம்’ படத்தில் நடித்த காளி வெங்கட், பாலசரவணன், டிஎஸ்கே, நாயகி சிவாத்மிகா, இசையமைப்பாளர் டி.இமான், இயக்குனர் விஷால் வெங்கட் எனப் பலரைப் பற்றிப் பாராட்டிப் பேசினார். அப்போது, அர்ஜுன் தாஸின் குரலைப் பற்றி வியந்து பாராட்டினார்.

“கைதி பட தெலுங்கு டப்பிங் வசனத்தை எனது நண்பர்தான் எழுதினார். அப்போது, அவரிடம் கெஞ்சி கூத்தாடி அர்ஜுன் தாஸ் குரலை நான் பேசுகிறேன் என்று சொன்னேன். எத்தனை முறை முயற்சி செய்தாலும், என்னால் முடியவில்லை. எவ்வளவு தம் கட்டினாலும், அவரது குரலை பேச முடியவில்லை. அப்போது, நான் பெயிலியர் ஆயிட்டேன் என்று நண்பரிடம் ஒப்புக்கொண்டேன்.

ADVERTISEMENT

ஒரு நடிகனாக ஒரு பாத்திரத்தைக் கையிலெடுத்தாலும், அதுவாகவே மாற பெரிய நம்பிக்கை வேண்டும். முதல் படத்திலேயே அதனை அர்ஜுன் தாஸ் செய்தது ஆச்சர்யம்.

அர்ஜுன் தாஸ் இப்படித்தான் என்று வட்டத்திற்குள் அடைக்கும்போது, அதிலிருந்து வெளியே வந்து வேறுவிதமான படங்களில் நடிப்பதும் பெரிய விஷயம்” என்று பாராட்டு தெரிவித்தார்.

ADVERTISEMENT

’பாம்’ படத்தை விநியோகிக்கிற சக்திவேலனைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘எனக்கே 3 படம் பண்ணிக் கொடுத்திருக்கார்’ என்று தெரிவித்தார். ‘அவரோட கம்பெனி சீல் விழுந்துட்டாலே படம் ஹிட்டு’ என்று கூறினார் மணிகண்டன்.

மணிகண்டனின் மேடைப்பேச்சுகளைக் கேட்கிற எவரும் ‘இன்னொரு விஜய் சேதுபதி மாதிரி இருக்கார்’ என்று சொல்வது அதிகமாகி வருகிறது. அந்தவகையில் ‘ஆரம்பகாலத்துல அவர் பேசின மாதிரியே மேடைகள்ல பேசுறார்’ என்று சில ரசிகர்கள் கூறுவது மணிகண்டனுக்கான தனிப்பாராட்டு..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share