காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க இதுதான் காரணம் – மாணிக்கம் தாகூர் எம்பி பகீர் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

Manickam Tagore

உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை, திமுகவின் அனைத்துக் கொள்கைகளையும் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவுடன் சேர வேண்டும் என்று தவ்விக் குதித்தார் என மாணிக்கம் தாகூர் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி, “20 ஆண்டுகளுக்கும் மேல் நம்முடைய முதுகு மேல் ஏறி நின்று சவாரி செய்த காங்கிரஸ் கட்சி… இன்று நம்முடைய முதுகில் குத்திவிட்டுப் போய் உள்ளது. இதை யாரும் மறந்துவிடாதீர்கள். களத்திலேயே இல்லாத காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு 5 இடங்களில் ஜெயிக்க நம்முடைய உடன்பிறப்புகள், நம்முடைய தலைவருடைய தொண்டர்கள், திமுககாரன்தான் காரணம்” எனக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்:

“காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, உதயநிதியைத் துணை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்கும் தோளில் தூக்கிச் சுமந்த கட்சி இந்தக் கட்சிதான். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன ஒருவரை அமைச்சராக்கி, துணை முதலமைச்சராக்கிய காங்கிரஸார் தொடர்ந்து ஆதரவு கொடுத்ததை மறந்துவிட்டுப் பேசுகிறார். இதுதான் நன்றிகெட்டத்தனம். அவரைப் பொறுத்தவரை அளந்து பேசியிருக்க வேண்டும். தேவையில்லாமல் காங்கிரஸாரின் வாயைக் கிளறிவிட்டார்.

ADVERTISEMENT

இப்போது ஒவ்வொரு கணக்காக வருவோம். சரியா? யார் என்ன செய்தார்கள்? என்பதைப் பார்க்கலாம்.

நான்காம் தேதி ரிசல்ட் வருகிறது. ரிசல்ட் வந்துகொண்டிருக்கும்போதே, மூன்று மணிக்கு டெல்லியிலிருந்து பாஜகவுக்கு ஆணை வந்தது. அதன் பிறகு அதிமுகவும் திமுகவும் சேர்ந்து பேச ஆரம்பித்தார்கள். ஐந்து மணிக்கு எங்களுக்குத் தகவல் வந்தது. ஐந்தாம் தேதி காலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து முடிவு எடுக்கப்போகிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு வந்ததும், நாங்கள் உடனடியாக MLAக்கள் கூட்டத்தைக் கூட்டினோம்.

ADVERTISEMENT

ஐந்தாம் தேதி மாலை டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில், தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாட்டுச் சூழ்நிலையை எடுத்துச் சொன்னார்.

ஐந்தாம் தேதி இரவு காங்கிரஸின் அரசியல் விவகாரக் குழு கூடி, ஆறாம் தேதி காலையில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுத்தது. அவரை முதலமைச்சராக்க ஆதரவு தருவது என்று முடிவு செய்தோம்.

ஏன் இந்த முடிவு?

நான்காம் தேதியே அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ரிசல்ட் வந்துகொண்டிருக்கும்போதே, தோற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஒரே ஒரு காரணம்தான் — தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக்கக் கூடாது என்பதுதான். இந்த வன்மம் ஒன்றுதான். இதை நாங்கள் வெளியில் சொல்லாமல் இருந்தோம். அதனால்தான் நாங்கள் அவர்களிடம் போகவில்லை. ஐந்தாம் தேதி ஏன் போகவில்லை? நான்காம் தேதியே பேச ஆரம்பித்துவிட்டார்களே” என்றார்.

கேள்வி: அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது குறித்து திமுக சார்பில் உங்களுக்குத் தகவல் வந்ததா, அல்லது நம்பகமான வட்டாரத்தில் இருந்து வந்ததா?

பதில்: பாஜகவிலிருந்துதான் பேச்சு ஆரம்பித்தது. நான்காம் தேதி மூன்று மணிக்கு பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் அதிமுக மற்றும் திமுக தலைவர்களைத் தொடர்பு கொண்டார். ஐந்து மணிக்கு இவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். பேச ஆரம்பித்த உடனே எங்களுக்குத் தகவல் வந்தது. பாஜக இரு தரப்புக்கும் connecting call போட்டுவிட்டது. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் connecting call போட்டவுடன் எங்களுக்குத் தகவல் வந்துவிட்டது.

இரு தரப்பும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதே தகவலைச் சி.வி. சண்முகம் அவர்களிடம் கேளுங்கள். அவருக்கு மாலையில்தான் தகவல் வந்தது. ஓர் அமைச்சர் பேசியதாகச் சொன்னார். நான்காம் தேதி மாலை விழுப்புரத்தில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தேன், அப்போது எனக்கு அந்தத் தகவல் வந்தது என்றார். இதுதான் உண்மை.

உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை, திமுகவின் அனைத்துக் கொள்கைகளையும் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவுடன் சேர வேண்டும் என்று தவ்விக் குதித்தார். விஜய் முதலமைச்சராகக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்து தோற்றார்.

கேள்வி: இரு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தால் யார் முதலமைச்சராக இருந்திருப்பார்கள்?

பதில்: எடப்பாடி பழனிசாமிதான். ‘பழனிசாமியை முதலமைச்சராக்குங்கள், நாங்கள் திமுக சார்பில் ஆதரவு கொடுக்கிறோம்’ என்பதுதான் டீல். ஒரே காரணம் — விஜய் முதலமைச்சராகக் கூடாது. இதற்கு ஆளுநரின் மறைமுக உதவியும் இருக்கும்; ஏனென்றால் connecting call டெல்லியில் இருந்துதானே போடப்பட்டது. அதனால்தான் இரண்டு முறை அலர்ட் வைத்தார்கள். இதையெல்லாம் வெளியில் சொன்னால் தப்பாக இருக்கும் என்று நினைத்துதான் இதுவரை பேசாமல் இருந்தோம்.

முதலில் பேபி டெல்லியில் சொன்னார். பிறகு அண்ணன் திருமா சொன்னார். அதன் பிறகு சண்முகம் சொன்னார். இறுதியாக ஐயூஎம்எல் தலைவர் காதர் சொன்னார். இப்போது இது முழுமையாக வெளியாகிவிட்டது.

திமுக இனியாவது இந்தப் பொய் நாடகங்களை நிறுத்த வேண்டும். அதிமுகவும் திமுகவும் ஒரே பக்கம் வந்துவிட்டார்கள். அதைச் செய்தது பாஜக. வெகு விரைவில் பாஜகவுடன் சேர்ந்து இவர்கள் இருவரும் கூட்டணி வைப்பார்கள். நாடாளுமன்றத்தில் இது வெளிநடப்பு என்று ஆரம்பிக்கும். திமுகவின் 22 எம்பிக்கள் எதிர்க்கட்சிகளுடன் சேர மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நடுவில் உட்கார்ந்து, படிப்படியாக பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இதுதான் நடக்கப்போகிறது.

இதற்கெல்லாம் முழுமுதற் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான். திமுகவின் கொள்கைகள் அனைத்தும் குப்பையில் போடப்படும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார். ஒரே வெறுப்பின் காரணமாக, திமுக இதுவரை எந்தெந்தக் கொள்கைகளுக்காக நின்றதோ அனைத்துக் கொள்கைகளையும் இழக்கும் நிலைக்குத் தள்ளியவர் உதயநிதி ஸ்டாலின்தான்” என்று காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share