மேற்சொன்ன தலைப்பு பலரது புருவங்களை நிச்சயம் உயர்த்தியிருக்கும். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் ஒருவரின் படத்தில் மணிரத்னத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கும்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், ’பாரடைஸ்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல், அவரது மெட்ராஸ் டாக்கீஸ் இதனை வழங்குகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இப்படத்திற்கு உள்ளது?
‘பாரடைஸ்’ படத்தின் இயக்குனர் பிரசன்ன விதனாகே இலங்கையைச் சேர்ந்தவர். உலகளவில் கவனித்தக்க இயக்குனராக விளங்குபவர். ’ஆகாச குசும்’, ’ஆனந்த ராத்திரிய’, ‘காடி’ உட்படச் சர்வதேச அளவில் கவனிப்பைப் பெற்ற சிங்களப்படங்களை இயக்கியவர். அவர் இயக்கியுள்ள முதல் இந்தியப் படமே ‘பாரடைஸ்’.
கேரளாவைச் சேர்ந்த நியூட்டன் சினிமா நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. ’கிஸ்’, ‘பேமிலி’ போன்ற ரசிகர்களின் கவனத்தைக் கொள்ளை கொண்ட திரைப்படங்களை இதற்கு முன் தந்துள்ளது.
’கோப்ரா’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் மேத்யூவும், ‘கவண்’, ’இரும்புத்திரை’ படங்களில் சிறிதாகத் தலைகாட்டி ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் நாயகன் பசில் ஜோசப்பைப் புரட்டியெடுக்கும் நாயகியாகத் தோன்றிய தர்ஷனா ராஜேந்திரன் இதில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹ்ருதயம்’ படத்தில் வரும் ‘தர்ஷனா..’ பாடலைக் கேட்டவர்களுக்கு இந்த தர்ஷனாவை நன்கு தெரிந்திருக்கும்.
எல்லாம் சரி. இந்தப் படத்தை மணிரத்னம் வெளியிடும் அளவுக்குப் படத்தில் என்ன இருக்கிறது? முதல் விஷயம், கடந்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ‘பூசான் திரைப்பட விழா’வில் சிறந்த திரைப்படத்திற்கான கிம் ஜிசோக் விருதைப் பெற்றிருக்கிறது ‘பாரடைஸ்’.
இரண்டாவது விஷயம், 2022ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அது சார்ந்த பொதுமக்களின் போராட்டங்களைச் சார்ந்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
அந்த காலகட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 5வது திருமணநாளைக் கொண்டாட அங்கு செல்கிறது. அப்போது, தங்கியிருக்கும் இடத்தில் அவர்களது லேப்டாப், பணம் உள்ளிட்ட உடைமைகளை ஒரு கும்பல் மிரட்டிப் பறித்துச் செல்கிறது. அது சம்பந்தமாகக் காவல் துறையில் அத்தம்பதியர் புகார் கொடுக்க, அதன்பின் நடப்பவற்றைச் சமூக யதார்த்தத்துடன் சொல்கிறது இதன் திரைக்கதை.
அது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராக ராஜிவ் ரவி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளராக கே என்று நமக்கு ஏற்கனவே தெரிந்த பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தரப்பின் வலியையும் வேதனையையும் சொல்வதாகவே இயக்குனர் பிரசன்ன விதனாகேவின் படங்கள் அமையும். பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களைத் தழுவியே அவரது படைப்புகள் இருக்கும். சர்வதேச அளவில் அதனாலேயே அவை புகழ் ஈட்டியிருக்கின்றன.
அதற்காக, அவரைக் கலைப்பட இயக்குனர் என்று ஒதுக்கிவிட முடியாது. ’மச்சான்’ போன்ற படங்களைத் தயாரித்ததன் வழியாக, அவரது ஜனரஞ்சக முகம் ஏற்கனவே தெரிய வந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு இலங்கை இயக்குனரின் படத்தை மணிரத்னம் வெளியிடுகிறார் எனும்போது, நிச்சயம் அதன்பின் வலுவான காரணம் ஏதாவது இருக்கும். ‘பாரடைஸ்’ வெளியானபின்னர் நம்மூர் விமர்சகர்கள் கூறும் ‘ஹிடன் டீடெய்ல்ஸ்’ வழியாக அது நமக்குத் தெரிய வரக்கூடும். யார் கண்டது?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
பாஸ்டேக்: மீண்டும் வெளியான முக்கிய அறிவிப்பு!
மோடிக்கு கொலை மிரட்டல் : தா.மோ. அன்பரசன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!