கோடையில் சுறுசுறுப்பான வேலைகளுக்கு இடையில் அவ்வப்போது நல்ல ஓய்வும் சத்தான உணவும் தேவை. அதற்கு இந்த சுவையான மசாலா மாங்காய் ஜூஸ் உதவும். மேலும் உடலில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க, சீரான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர் குடிப்பதுடன், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சம்பழச் சாறு விட்டுக் கலந்து குடிப்பது உடலின் உள்ளேயும், வெளியேயும் புத்துணர்ச்சியைத் தரும்.
என்ன தேவை?
- மாங்காய் – 1
- ஐஸ் கட்டிகள் – சிறிதளவு
- குளிர்ந்த தண்ணீர் – இரண்டரை கப்
- புதினா இலைகள் – சிறிதளவு
- மசாலாத் தூளுக்கு…
- வறுத்த சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
- கறுப்பு உப்பு – 2 டீஸ்பூன்
- மிளகு – கால் டீஸ்பூன்
- சர்க்கரை – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மாங்காயை வேகவைத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் போட்டு கூழாக்கவும். ஒரு ஜாடியில் மாங்காய் விழுதைப் போட்டு, மசாலாத் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மீண்டும் நன்கு கலந்து, தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும். வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பானம் இது.
