மங்களூர் ஆட்டோவில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகையைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
குண்டு வெடிப்பு
கர்நாடக மாநிலம் மங்களூருவின் கன்கனாடி காவல் நிலையம் அருகே நகூரி என்ற பகுதியில் நேற்று (நவம்பர் 19) மாலை ஆட்டோ ஒன்று திடீரென வெடித்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பயணி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினரும், தடயவியல் துறையினரும் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் பேட்டரிகளுடன் வெடித்த நிலையில் குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது.
இதனால் காவல்துறையினர் இந்த விபத்து பயங்கரவாத சம்பவமாக இருக்குமோ என்று விசாரணை நடத்தினர்.
பயங்கரவாத தாக்குதல்
இதுதொடர்பாக இன்று (நவம்பர் 20) கர்நாடக டிஜிபி பிரவீன் சூத், “ இது பயங்கரவாத தாக்குதல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் பயங்கரவாத செயலுக்கான அடையாளம்.
இதுகுறித்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய அமைப்புகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்திருந்தார்.
உதகை நபரிடம் விசாரணை
ஆட்டோவில் பயணித்த நபரின் சட்டைப்பையில் இருந்த ஆதார் அட்டையைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் உதகையைச் சேர்ந்த நபரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்நபரை கோவை அழைத்து வந்து உதகை நபரின் ஆதார் எண் மங்களூரு நபரிடம் எப்படிக் கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
டி20: சதம் அடித்த சூர்யகுமார்- நியூசிலாந்து எடுத்த ஹாட்ரிக்: வெல்வது யார்!
