தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று (மார்ச் 17) கூடியது. கேள்வி நேரத்தின் போது, “திருவாலங்காடு கோயிலில் மாந்திரீக பூஜைக்கு போதிய வசதியில்லை. சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற நாட்களில் பக்தர்கள் வந்து தங்கும் வகையில் விடுதி ஒன்று அமைத்து தர வேண்டும்” என திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார். OPS Question Sekar Babu reply
இதற்கு பதிகளித்து பேசிய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “முன்னதாக திருமண மண்டபம் வேண்டும் என்று கேட்டிருந்தார். இப்போது மற்ற காரியங்கள் செய்வதற்காக மண்டபம் கேட்கிறார். உடனடியாக துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து, வாய்ப்பு இருந்தால் நிச்சயம் ஏற்படுத்தி தரப்படும்.
மகா சிவராத்திரி என்பது கடந்த காலங்களில் அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படாத ஒரு வரலாற்றை மாற்றி அமைத்து 9 திருக்கோயில்களில் மகாசிவாரத்திரியை முதன்முதலில் நடத்திய பெருமை திராவிட மாடல் அரசுக்கு சேரும்” என்று பதிலளித்தார்.
அப்போது எழுந்த முன்னாள் முதல்வரும், போடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர் செல்வம், “எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பேசும் போது மாந்திரீக பூஜை என்று சொன்னார். அப்படி என்றால் என்ன என்று அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த சேகர்பாபு, “அவரும்(ஓபிஎஸ்) ஆன்மீகவாதி. நீண்ட நெடிய படிகட்டுகளில் ஏறி, பல திருக்கோயில்களில் அவரது எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்று சுற்றி வருபவர். அவருக்கு தெரியாதது ஒன்றுமல்ல. மாந்திரீக பூஜை இந்த ஆட்சியில் எங்கும் நடைபெறுவது இல்லை. பரிகார பூஜையை தான் மாந்திரீக பூஜை என்று அவர் மாற்றி சொல்லிவிட்டார். நிச்சயம் அந்த மண்டபம் கட்டித்தரப்படும் என்று அண்ணன் பன்னீர் செல்வத்துக்கும், எம்.எல்.ஏ. ராஜேந்திரனுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிலளித்தார்.
அமைச்சரின் இந்த நகைச்சுவை பதிலை கேட்டு முதல்வர், சபாநாயகர் என அவையில் இருந்த அனைவரும் குலுங்கி சிரித்தனர். OPS Question Sekar Babu reply