”மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது” : உயர்நீதிமன்ற மதுரை கிளை

Published On:

| By christopher

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜூன் 19) உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

வீடு, வேலை வேண்டும்!

அதில், “நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

குத்தகை காலம் நிறைவடைந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் கீழ் இந்த நிலம் அரசிடம் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே பிபிடிசி என்ற தனியார் நிறுவனம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அவர்களது தங்குமிடத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்பாக வெளியேற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்கூட்டியே தொழிலாளர்களை வெளியே அனுப்புவதால், தாமாக முன்வந்து ஓய்வு பெறும் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1.4 லட்சம் முதல் 2.80 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் 60 வயதை எட்டியவர்களுக்கு எவ்விதமான தொகையும் வழங்கப்படவில்லை.

சொந்த இடமோ, வீடோ இல்லாமல் இங்குள்ள தொழிலாளர்கள் நான்கு தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வரும் சூழலில், தற்போது வெளியேற சொல்வதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

எனவே மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர முன் வர வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்டக்கழகம், களக்காடு முண்டந்துறை சரணாலய பகுதிகள், அங்கன்வாடிகள் போன்றவைகளில் பணி வழங்க வேண்டும். மேலும் மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில், மறுபணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்தினருக்கு மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டது.

அவர்களை வெளியேற்றக்கூடாது!

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இலங்கை தமிழர்கள் பலருக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரப்பர் கழகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு போன்றவற்றை செய்து தர வேண்டும்” என வாதிட்டார்.  அதற்கு அரசுத்தரப்பில், “BBTC ஒரு தனியார் நிறுவனம்” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றக்கூடிய மக்களுக்கு என்ன வகையான மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் உள்ளன? இது தொடர்பாக ஏதேனும் அறிக்கை உள்ளதா?. தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்துதரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது. அவர்களின் மறுவாழ்வுக்காக என்னென்ன திட்டங்கள் உள்ளன என்று மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிடுகிறோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் வழக்கு விசாரணையையும் வரும் ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சிவகார்த்திகேயன் படத்தால் போட்டி போட்டு வியாபாரம் ஆன பிரபாஸின் ’கல்கி’!

நீட் தேர்வு முறைகேடு… ஜூன் 21ல் காங்கிரஸ்… ஜூன் 24ல் திமுக போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share