உத்தரப் பிரதேசத்தில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். Man Shoots Reel As Train Passes
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே கசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராஸ்யா. வயது 19. இந்த இளைஞர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
ரயில் பாதைகளில், ஓடும் ரயில்களில் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதோ, புகைப்படம் எடுப்பதோ கூடாது என்று ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மீறினால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் செல்பி மோகத்திலும் ரீல்ஸ் மோகத்திலும் இளைஞர்கள் அதை கண்டு கொள்வதே கிடையாது.
இந்தநிலையில் ரஞ்சித் சவுராஸ்யா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் போது, தண்டவாளத்தில் படுத்து, தன்மேல் ரயில் கடப்பதை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டார். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனத்தை குவித்தது.
உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட இந்த ரீல்ஸ் வீடியோ ரயில்வே போலீசார் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் குசும்பி ரயில் நிலையம் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித் சவுராஸ்யா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் போலீசாரிடம் அவர், “தெரியாமல் இந்த தவறை செய்துவிட்டேன். இனி இப்படி செய்ய மாட்டேன்” என்று மன்னிப்பு கோரினார். எனினும் அவரை போலீசார் கசன்கஞ்ச் பகுதியில் உள்ள சிறையில் அடைத்தனர்.
இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வரும் நிலையில், இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். Man Shoots Reel As Train Passes