பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு பத்து நாட்களில் மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில், சட்டத்திருத்த மசோதா மேற்குவங்க மாநில சட்டமன்றத்தில் அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஆகஸ்ட் 28) தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், Paschimbanga Chattro Samaj மாணவர் இயக்கம் நேற்று (ஆகஸ்ட் 27) கொல்கத்தா தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியும், புகைகுண்டு வீசியும் போலீசார் கலைத்தனர். இந்த கலவரத்தில் 126 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் இன்று மேற்குவங்கத்தில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு நிறுவன நாள் விழா கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி,
“அடுத்த வாரம் சட்டமன்றத்தை கூட்டி, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை உறுதிசெய்யும் வகையில் மசோதா நிறைவேற்ற உள்ளோம். இந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்புவோம். அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், ராஜ்பவன் முன்பாக போராட்டம் நடத்துவோம்.
காவல்துறை அதிகாரிகள் தங்கள் ரத்தத்தை சிந்தி, போராட்டக்காரர்களை நேற்று கட்டுப்படுத்தினர். அவர்களுக்கு இந்த நேரத்தில் பெரிய சல்யூட். பாஜகவின் சதியை முறியடித்துவிட்டார்கள். பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்க பாஜக விரும்பவில்லை. மேற்குவங்கத்தை இழிவுபடுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள்” என்று காட்டமாக பேசினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…