விமர்சனம்: மாமன்னன்

Published On:

| By Kavi

உதய் பாடகலிங்கம்

‘சீரியஸ்’ வடிவேலு; ‘ஆக்‌ஷன்’ உதயநிதி!

ADVERTISEMENT

வடிவேலு சீரியசான வேடத்தில் நடிக்கிறாரா? இந்த கேள்விதான் ‘மாமன்னன்’ படத்தை நோக்கி ஒரு சாதாரண ரசிகனைத் திரும்ப வைக்கும் முக்கிய அம்சம். அவரோடு உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்படப் பலர் நடித்திருக்கிறார்களா என்பது அடுத்தபடியாகத்தான் கவனிப்பைப் பெறும்.

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன் பார்த்துச் சிலாகித்தவர்களுக்கு, அவரது மூன்றாவது படமா இது என்ற வகையில் மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பு கூடி நிற்கும். அனைத்துக்கும் மேலாக, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் எனும்போதே நம்முள் பல கேள்விக்குமிழ்கள் முட்டையிட்டன.

ADVERTISEMENT

அத்தனை எதிர்பார்ப்புகளும் படம் பார்த்து முடித்தபிறகு நிறைவானதா என்பதே பெருங்கேள்வியாக உருவெடுத்து நிற்கிறது. எப்படி இருக்கிறது ‘மாமன்னன்’?

ஒரு தனித்தொகுதியின் கதை!

ADVERTISEMENT

காசிபுரம் என்ற தனித்தொகுதி. ஆளும்கட்சியான சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் சார்பில், அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாமன்னன் (வடிவேலு). அவரது மகன் அதிவீரன் (உதயநிதி). தந்தைக்கும் மகனுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை.

காரணம், சிறு வயதில் அதிவீரனின் நண்பர்கள் மூவர் ஆதிக்க வெறிக்குப் பலியான கொடூரம். தான் சார்ந்த கட்சிக்காகவும், அதன் வழியே மக்கள் தொண்டு ஆற்றலாம் எனும் எண்ணத்திற்காகவும், அச்சம்பவத்தைக் குழி தோண்டிப் புதைக்கத் துணை நிற்கிறார் மாமன்னன். ஆனால், தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற அடையாளமே, கட்சியில் மாவட்ட அளவில் அவருக்கான அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது.

அதிவீரனுக்குச் சொந்தமான தற்காப்புக்கலை பயிற்சி மையத்தில், அவரது நண்பர்கள் ஒரு டியூஷன் சென்டரை நடத்துகின்றனர். அது சிலரை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. அவர்கள் அதிவீரனின் இடத்தைச் சூறையாட, பதிலுக்கு அவர்களது அலுவலகத்தைச் சுக்குநூறாக்குகின்றனர் அதிவீரனும் அவரது நண்பர்களும். அந்த இடம் ச.ச.ம.க.வின் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் (பகத் பாசில்) சகோதரருக்குச் (சுனில்) சொந்தமானது. நடந்த விஷயத்தை அறியும் ரத்தினவேல், மாமன்னனையும் அதிவீரனையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினால் தனது அரசியல் வாழ்வில் களங்கம் படியாது என்று எண்ணுகிறார். ஆனால், நடப்பதோ எதிர்த்திசையில் அமைகிறது.

ரத்தினவேல் வீட்டில் மாமன்னன் கைகட்டி நிற்க, மற்றனைவரும் உட்கார்ந்திருக்கின்றனர். அக்காட்சியைக் காணும் அதிவீரன் கொதிக்கிறார். அதனைக் கண்டுகொள்ளாமல், அதிவீரனை அமரச் சொல்கிறார் ரத்தினவேல். பதிலுக்கு, தந்தையை நாற்காலியில் அமரச் சொல்கிறார் அதிவீரன். அதற்கு, ‘அவர் உட்காரமாட்டார். எத்தனை பேரு சொல்லியிருக்காங்க’ என்கிறார் ரத்தினவேல்.

‘இதுவரை நீங்க உட்காரச் சொல்லியிருக்கிறீங்களா’ என்று எதிர்க்கேள்வி கேட்டுவிட்டு, தந்தையை அமர்த்த முற்படுகிறார் அதிவீரன். மாமன்னன் தயங்கி நிற்க, தந்தை உட்கார்ந்தே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் மகன். மாமன்னன் அமர முற்படுகையில், அவரை மிரட்டும் தொனியில் பேசத் தொடங்குகிறார் ரத்தினவேல்.

’உங்க அப்பாவை இது நாள்வரை நிக்க வச்சதுதான் என்னோட அடையாளம்; உன்னை உட்காரச் சொன்னது என்னோட அரசியல்’ என்கிறார். அவரது வார்த்தைகளை உடைத்தெறியும் விதமாக, மாமன்னனை நாற்காலியில் அதிவீரன் அமரச் செய்கிறார்.

அப்போது, அங்கு ஒரு களேபரமே நிகழ்கிறது. மாமன்னனையும் அதிவீரனையும் கொல்லும் மனநிலைக்குச் செல்கிறார் ரத்தினவேல். விஷயம் முதலமைச்சர் காதுக்குச் செல்கிறது.

அதன்பிறகு ரத்தினவேல், மாமன்னன் தரப்பின் அரசியல் செல்வாக்கு என்னவானது என்று நீள்கிறது ‘மாமன்னன்’.

ஒரு தனித்தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இருப்பவரை அவரது கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் எப்படி நடத்துகின்றனர்? சாதீயம் சார்ந்த அவர்களது பார்வை அதில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதைப் பேசுகிறது இப்படம்.

தனக்கென்று தனித்துவமான அரசியல் பின்னணி இருந்தும், இப்படியொரு கதையில் நடிக்கச் சம்மதித்த உதயநிதியின் தைரியத்தைப் பாராட்டியாக வேண்டும். இது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையா என்ற கேள்விக்கு, படம் பார்த்தபிறகு நீங்களாகவே பதிலைப் பெறலாம்.

பன்றியும் வேட்டை நாயும்!

இரண்டு டம்ளர்களுக்கு நடுவே உதிர்ந்து கிடக்கும் பூக்களைக் காட்டி ‘பரியேறும் பெருமாள்’ கிளைமேக்ஸில் நெகிழ்ச்சியூட்டியவர் மாரி செல்வராஜ். ‘கர்ணன்’ படத்தின் இடைவேளைக் காட்சியில், கழுதையின் கால்கட்டுகளை அவிழ்த்துவிட்டு அதனைச் சுதந்திரமாக ஓடவிட்டிருப்பார். அகாலமாக மரணமடைந்த சிறுமி, அந்தக் குடும்பத்தின் காவல் தேவதையாக மாறியதாக உருவகப்படுத்தியிருப்பார்.

‘மாமன்னன்’ படத்தில் அப்படித்தான் பன்றிக்குட்டியும் வேட்டை நாய்களும் குதிரையும் காட்டப்படுகின்றன. கதாபாத்திரங்கள் வாழும் சூழலையும் எண்ணவோட்டத்தையும் பகிரங்கப்படுத்துவதோடு, சாதிரீதியிலான வேறுபாட்டை உணர்த்தவும் அவ்விலங்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அவ்வளவு ஏன், மாமன்னன் என்ற பெயரையே சிலர் ‘மண்ணு’ என்று சுருக்கி அழைப்பதைக் கூட ஒரு குறியீடாக மாற்றியிருக்கிறார். அது போன்ற அம்சங்கள் அவரது படைப்பாற்றலைக் கொண்டாடச் செய்கின்றன.

சமூகத்தில் நிலவும் ஆதிக்க மனப்பான்மையை திரைக்கதை விமர்சித்தாலும், அதன் மையச்சரடாக அரசியல் அதிகாரமே உள்ளது. அதனால், இதுவொரு அரசியல் படமே. இந்தக் கதையில் திடுக்கிட வைக்கும் திருப்பங்களோ, நாடகத்தனமான பாத்திரப் படைப்போ இல்லை. அதனாலேயே, படம் மெதுவாக நகரும் உணர்வு எழலாம். அதையும் தாண்டி, அடுத்தது என்ன என்று கேட்கும் விதமாக முன்பாதி நகர்கிறது. பின்பாதியில் அந்த சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.

கதையில் இரு வேறு கட்சிகள் காட்டப்படும்போது, ‘இது இந்தக் கட்சி’ என்று ஒரு ரசிகரால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். அதையும் மீறி கதைக்களம், கட்சிப் பெயர்கள், சின்னங்கள் என்று பல விஷயங்கள் திரையில் அணிவகுக்கின்றன.

அதனால், உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவு என்ற எண்ணத்தையே படம் ஏற்படுத்துகிறது. ஹீரோ, வில்லன் என்று மாறி மாறிக் காட்டிய இயக்குனர், காவல் துறைக்கான இடத்தைத் திரைக்கதையில் தவிர்த்திருக்கிறார்.

போலவே, அரசியல் பின்னணி கொண்ட நாயகனின் வீட்டில் குடும்ப உறுப்பினர்களைத் தவிர காவலுக்கு வேறு எவருமே இல்லை எனும்விதமாகக் கதை சொல்லியிருக்கிறார். அது போன்ற சிற்சில விஷயங்கள் நெருடலாக உள்ளன.

ஒரு படமாக நோக்கினால், மாரி செல்வராஜ் தந்திருக்கும் பிரமாண்டமான படைப்பு இது என்று ஒப்புக்கொண்டாக வேண்டும். அதற்கு முக்கியக் காரணம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. படத்தில் ஏழு பாடல்கள். ‘கொடி பறக்குற காலம்’, ‘நெஞ்சமே நெஞ்சமே’ தவிர்த்து மற்றனைத்துமே திரைக்கதையின் வேகத்தை அதிகப்படுத்தும் நோக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அது போதாதென்று பின்னணி இசை வழியே நம் மனதுக்குள் ஒரு எழுச்சியையே உண்டுபண்ணியிருக்கிறார். ரஹ்மானின் சிறப்பான பின்னணி இசை இடம்பெற்ற படங்களில் ஒன்றாக நிச்சயம் ‘மாமன்னன்’ இடம்பெறும்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, குமார் கங்கப்பனின் கலை வடிவமைப்பில் பன்றிகள் இருப்பிடம், வேட்டை நாய்களுக்கான ஓட்டப்பந்தயம், வாக்கு எண்ணுமிடம், தற்காப்புக்கலை மையம், டியூஷன் சென்டர், வீடுகள் என்று பல்வேறு இடங்கள் திரையில் தடம் பதிக்கின்றன. நேரில் பார்க்கும் உணர்வை மீறி, அப்பதிவுகள் அழகியலோடு வார்க்கப்பட்டிருப்பது காட்சியாக்கத்தின் பிரமாண்டத்திற்குத் துணை புரியலாம். ஆனால், கொஞ்சம் கூட திரையில் யதார்த்தம் மிளிர உதவவில்லை. திரைக்கதை பார்வையாளர்கள் மனதில் முழுமையாகத் தாக்கம் செலுத்துவதை அது தடுத்து நிறுத்துகிறது.

செல்வா ஆர்.கேவின் படத்தொகுப்பு, திரையில் கதை தெளிவாகச் சொல்லப்பட உதவுகிறது. ஒரு காட்சியில் நாயகன் குறித்த கடந்த கால உண்மையொன்றை நாயகியிடம் பகிரும் அவரது தாய், ‘அது எனக்கும் எங்க சாமி பொட்டி பகடையப்பனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்’ என்று சொல்கிறார். அது, திரைக்கதையில் வேறேதேனும் காட்சி விடுபட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தொழில்நுட்பரீதியில் கடுமையான உழைப்பு கொட்டப்பட்டுள்ளதற்கு ஈடாக, திரையில் அனைவரும் செம்மையாக நடித்திருக்கின்றனர். அதில் முதலிடம் பெறுவது மாமன்னனாக நடித்துள்ள வடிவேலு. இவரால் எப்படி நம்மைச் சிரிக்க வைக்காமல் இருக்க முடிகிறது என்பதற்கு ஒவ்வொரு காட்சியிலும் தனது திறமையை வெளிக்காட்டி பதிலளித்திருக்கிறார். இதே பாணியில், ஒப்பனைப்பூச்சு சிறிதுமின்றி அவர் கதையின் நாயகனாகத் தொடர்ந்து தோன்ற வேண்டுமென்பதே நமது விருப்பம்.

பகத் பாசில் ஏற்ற ரத்தினவேல் பாத்திரம் தமிழ் திரைக்குப் புதிதல்ல. ஆனால், அவர் அப்பாத்திரத்தோடு பொருந்தியிருக்கும் விதம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. கீர்த்தி சுரேஷுக்கு இதில் பெரிய பாத்திரம் இல்லை. அதேநேரத்தில், அவரது இருப்பு வலிந்து திணிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

’மாமன்னன்’ தரும் இன்னொரு ஆச்சர்யம், உதயநிதி திரையில் தோன்றியிருக்கும் விதம். மொத்த உடலிலும் ஆக்ரோஷம் நிறைந்து நிற்பது போன்று ஒவ்வொரு பிரேமிலும் வலம் வருவது,  ‘ஆக்‌ஷன் ஹீரோ’ அந்தஸ்தை எளிதாகப் பெற்றுத் தருகிறது.

அதனாலேயே, இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியோடு நாம் வெகு இயல்பாக ஒன்றிப் போகிறோம். நிச்சயமாக, இப்படம் அவரை ரசிகர்கள் நினைவில் இருத்தும் ஒரு படைப்பு.

மலையாள நடிகர் லால், அழகம்பெருமாள், கதிர், ரவீனா ரவி, விஜயகுமார் என்று இன்னும் பலர் இதில் நடித்துள்ளனர். உதயநிதியின் நண்பர்கள் குழாமில் ராமகிருஷ்ணா உட்படச் சிலர் தோன்றியுள்ளனர். படத்தில் அடிமுறை ஆசான் என்றொரு பாத்திரம் இடம்பெறுவது சில ஷாட்கள் தான் என்றாலும், திரைக்கதையில் அதற்கும் முக்கியத்துவம் உண்டு.

நிச்சயம் சிற்றிலக்கிய இதழ்களில் அது விவாதிக்கப் பெறும். அரசியல் கட்சியினர், அடியாட்கள் என்று சில நூறு பேர்களாவது திரையில் அவ்வப்போது தென்படுகின்றனர். இவர்களுக்கு நடுவே, உதயநிதியின் தாயாக வரும் கீதா கைலாசம், ‘யார் இது’ என்று நம்மை உற்றுநோக்க வைக்கிறார். அவருக்கென்று தனிப்பட்ட காட்சிகள் இல்லாதது மைனஸ்.  

சமூகநீதியின் அவசியம்!

முதலமைச்சரின் அறைக்குள் அத்துமீறி உதயநிதி உட்புகுவதாக ஒரு காட்சி உண்டு; அது ‘க்ளிஷே’ என்றபோதும், கொதிக்கும் மனதுக்கு மருந்திடும் ரகமாக இருக்கும். தொடக்கக் காட்சிகளில் நான்கைந்து முறை தன்னைச் சந்திக்க வருபவர்களை நாற்காலியில் வடிவேலு அமர வற்புறுத்துவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அதற்கான காரணம், ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் முன்பாக அவர் காலம்காலமாக நின்று கொண்டிருப்பதுதான் என்பது பின்னர் வெளிப்படுத்தப்படும்.

ஒடுங்கிப்போவதன் வலியை உணர்ந்த காரணத்தால் சில இனக்குழுக்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே அதிகார வேறுபாடு அதிகம் இராது. பகத் பாசில் – ரவீனா ரவி மற்றும் வடிவேலு – கீதா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அந்த வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். தானும் மகனும் அவமானப்படுத்தப்பட்டதை மனைவியிடம் பகிரும் காட்சியில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் கீதாவின் கால்மாட்டில் அமர்ந்திருப்பார் வடிவேலு. அக்காட்சியாக்கம் நமக்குள் ஆயிரம் விஷயங்களை உணர்த்தும்.

படத்தின் பின்பாதியில் லால் உடன் உதயநிதி கைகொடுப்பதும், வடிவேலுவிடம் பகத் பாசில் கைகொடுப்பதும் நமக்கு இரு வேறு அர்த்தங்களை உணர்த்துவதாக உள்ளன. இறுதிக்காட்சியில் வடிவேலு திரையில் தோன்றும்போது கைத்தட்டல்கள் தியேட்டரை நிறைக்கின்றன. சமூகநீதியின் அவசியம் அப்போது பிடிபடும்.

’மாமன்னன்’ படத்தின் முன்பாதிக்கு ஈடாகப் பின்பாதியில் அதிரவைக்கும் அம்சங்கள் இல்லை. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியும் கூட ‘எதற்கு’ என்ற கேள்வியை எழுப்பும்விதமாகவே உள்ளது. அதேநேரத்தில், ‘கர்ணன்’ படம் தந்த அரைகுறை திருப்தியை மீறி நல்லதொரு ஆக்கம் இதில் மிளிர்கிறது.

உதயநிதி இதனைக் கடைசி படம் என்று குறிப்பிட்டாலும், வடிவேலுவின் திரை வாழ்வில் முக்கியமானதொரு படமாக மாறியிருக்கிறது ‘மாமன்னன்’. அதேநேரத்தில், அரசியல் கட்சிகள் சார்ந்த விமர்சனங்களைத் தாண்டி இப்படம் பேசும் அரசியல் மிக முக்கியானதொன்றாகவும் இருக்கிறது. அதற்காகவே, ‘மாமன்னன்’ படம் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share