மாமல்லபுரம், தாஜ்மகால் என சுற்றுலா தலங்களை மக்கள் இன்று இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Mamallapuram to Taj Mahal
கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை கௌரவிக்கவும் அவற்றை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
196 நாடுகளில் 1,223 உலக பாரம்பரிய தலங்கள் உள்ளன. இவற்றில் 952 கலாச்சார தலங்களாகும். 231 இயற்கை தலங்களாகும். 40 இடங்கள் இரண்டும் இணைந்த தலங்களாகும்.
ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால், அஜந்தா, எல்லோரா குகைகள் என இந்தியாவில் 43 உலக பாரம்பரிய தலங்கள் உள்ளன.
உலக பாரம்பரிய தினத்தில் பாரம்பரியத்தைக் கொண்டாடவும் பாதுகாக்கவும் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில் இந்தியாவில் மாமல்லபுரம், தாஜ்மகால் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் இலவசமாக சென்று வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் உள்ள புராதன சின்னங்கள் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுவோருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று புனித வெள்ளி, விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகளவு குவிந்து வருகின்றனர். Mamallapuram to Taj Mahal
