இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம் என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை மற்றும் நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதுச்சேரியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து இன்று (ஏப்ரல் 15) மதியம் நடந்த பொதுக் கூட்டத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மத்திய காங்கிரஸ் அரசானது, புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரத்தை அப்போது தந்தது. தற்போது புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும். காங்கிரஸ் கட்சியானது உறுதியாக மாநில அந்தஸ்து பெற்று தரும்.
ஆனால், மாநில அந்தஸ்தை மோடி தரமாட்டார். ரங்கசாமியும் செய்ய மாட்டார். பாஜக தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பற்றி ஏதும் கூறவில்லை. இதன்மூலம் மோடி அரசானது புதுச்சேரி மக்களை புறக்கணிப்பது தெளிவாகிறது.
இந்தியா கூட்டணி வந்த பிறகு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம் என வாக்குறுதி தருகிறோம்.
ஆளுநர் மூலம் நெருக்கடி!
அமலாக்கத் துறை மூலமும், ஆளுநர்கள் மூலமும் பாஜக அரசு தொல்லை செய்து வருகிறது. புதுச்சேரியில் ஆளுநரை வைத்து காங்கிரஸ் அரசுக்கு எப்படி தொல்லை தந்தார்களோ, அதேபோல தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவியை வைத்து நிர்வாகத்தை நடத்த விடாமல் முடக்கும் பணியை செய்து நெருக்கடியை மோடி தருகிறார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவதே மோடி அரசின் வேலை.
மோடி, அமித் ஷா மிகப் பெரிய சலவை இயந்திரம் வைத்துள்ளனர். வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் மிரட்டி அடிபணிந்தால் சலவை இயந்திரத்தில் போட்டு தூய்மை செய்து விடுகின்றனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டோர் பாஜகவில் சேர்ந்தால் தூய்மையானவர்கள் ஆகின்றனர்.
எந்தக் கடவுளையும் கும்பிடலாம்!
‘சோனியா, கார்கே ஆகியோருக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் வரவில்லை’ என்று மோடி குற்றஞ்சாட்டி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி தலைவர்களாக சோனியா, கார்கேவை அவர் அழைக்கவில்லை என்பதே உண்மை. நாங்கள் ராமரை மதிக்கிறோம். அதேவேளையில் யார் வேண்டுமானாலும் எந்தக் கடவுளையும் கும்பிடலாம். இந்தக் கடவுளைத்தான் கும்பிட வேண்டும் என்று யாரையும் வற்புறுத்த முடியாது.
மோடி ஆட்சியை பொறுத்தவரை பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி வாக்குறுதி தந்தார். பத்தாண்டுகள் ஆகிவிட்டன. 20 கோடி பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும். வேலை தரவில்லை. பிரதமர் பொய் சொல்கிறார். மோடி நிறைய வாக்குறுதி தந்து நிறைவேற்றவில்லை.
நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத சூழல் மாற வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் காலியாகவுள்ள 30 லட்சம் வேலைவாய்ப்புகள் ஓராண்டில் நிரப்பப்படும். ஆண்டுதோறும் மகளிர் உரிமத் தொகை ரூ.1 லட்சம் தரப்படும். அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், மதிய உணவுத்திட்ட பணிபுரிவோர் வாங்கும் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்” என்று கார்கே கூறினார்.
தொடர்ந்து மாலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கே வாக்கு சேகரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு?