இந்தியாவில் தொழிலாளர் வருவாய் விகிதம் பற்றிய ஆய்வில் ஆண்கள் 82%, பெண்கள் 18% அளவில் ஊதியம் பெறுகின்றனர் என்கிற அதிர்ச்சி சமீபத்திய ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது.
ஒரு நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் சரியான சமத்துவத்துடன் உள்ளனர் எனும்போது, அவர்கள் பெறும் தொழிலாளர் வருவாய்க்கான பங்கும் 50% என்ற அளவில் இருக்கும். எனினும், இந்த வாரம் வெளியான உலக சமத்துவமின்மை அறிக்கை 2022இல், சர்வதேச அளவிலான வருவாயில் பாலின வேற்றுமை இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை கணக்கிடப்பட்ட இந்த அறிக்கை 180 நாடுகளை உள்ளடக்கியுள்ளது. அவற்றில், பெண்களின் வருவாய் பங்கு 10% முதல் 45% வரையில் நாடுகளுக்கேற்ப வேறுபடுகிறது. உலகம் முழுவதும் 50%க்கும் குறைவாகவே இந்த விகிதம் உள்ளது. இந்தியாவில் தொழிலாளர் வருவாயில் ஆண்களுக்கு 82% கிடைக்கும்போது பெண்களுக்கு அது 18% என்ற அளவில் உள்ளது என அதிர்ச்சி தெரிவிக்கிறது.
இது, கடந்த 2019ஆம் ஆண்டில் ஆசியாவின் சராசரியான 27% என்ற அளவை விடவும் குறைவு ஆகும். இந்தியாவில் இது 18.3% ஆகவும், அண்டை நாடுகளான பூடான் (17.5%), வங்காளதேசம் (16.9%), பாகிஸ்தான் (7.4%) மற்றும் ஆப்கானிஸ்தான் (4.2%) ஆகிய நாடுகளில் இதை விடவும் குறைவாகவும் உள்ளது. எனினும் நேபாளம் (23.2%), இலங்கை (23.3%) மற்றும் சீனா (33.4%) ஆகிய நாடுகளில் சற்று அதிக அளவிலான விகிதம் காணப்படுகிறது.
உலக வங்கி மதிப்பீட்டின்படி, 2005ஆம் ஆண்டில் 26% ஆக இருந்த இந்த விகிதம், 2019ஆம் ஆண்டில் 20.3% ஆக வீழ்ச்சி கண்டது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை – செப்டம்பர் வரையிலான பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த விகிதம் 16.1% என பெருமளவில் குறைந்தது.
உலக அளவில் பெண்களுக்கான வருவாய் விகிதம் (45%) அதிகம் கொண்ட நாடாக மோல்டாவா உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் சராசரியாக 15% என்ற அளவில் உள்ளது. ஏமன் நாடு மிக குறைந்த பெண்களுக்கான வருவாய் விகிதம் (1%) கொண்ட நாடாக உள்ளது.
வேலையின் வழியே பெண்களுக்குக் கிடைத்த ஒட்டு மொத்த வருவாய், கடந்த 1990ஆம் ஆண்டில் 30% என்ற அளவிலும், இன்றைய தினம் 34% என்ற அளவிலும் உள்ளது. வேலை செய்வதில் பெண்களின் பங்கு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எனினும், பெண்களின் பணிக்கான வருவாய் பங்கு என்பது இன்னும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
**-ராஜ்**
.
