“மற்ற மொழி சினிமா துறையை விட மலையாளம்தான் சிறந்தது”- மவுனம் கலைத்த மோகன்லால்

Published On:

| By Kumaresan M

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து ஹேமா அறிக்கை வெளியானது. இதையடுத்து , மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் விலகினார். அதோடு, நிர்வாகக்குழுவும் கலைக்கப்பட்டு விட்டது.

இந்த விவகாரத்துக்கு பிறகு, நடிகர் மோகன்லால் முதன்முறையாக இன்று (ஆகஸ்ட் 31 ) திருவனந்தபுரத்தில் மீடியாக்களை சந்தித்தார்.

அப்போது, மோகன்லால் கூறியதாவது,  “அம்மா அமைப்பு டிரேட் யூனியன் அல்ல. அது ஒரு குடும்பம் போன்றது. நான் பொறுப்பில் இருந்து விலகி ஓடி விடவில்லை.  இந்த குற்றச்சாட்டுகளுக்கு எங்களிடத்தில் பதில் இல்லை. கடந்த 47 ஆண்டுகளாக மலையாள மக்களுடன் இருக்கிறேன். அம்மா அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்துள்ளது. துரதிருஷ்டவசமாக சில விஷயங்கள் நடந்து விட்டது.

நாட்டிலுள்ள மற்ற மொழி சினிமாத்துறையை விட மலையாள சினிமா உலகமே சிறந்தது. எனது, மனைவிக்கு கடந்த வாரத்தில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாகவும் எனது புதிய படத்தின்  பணிகள் காரணமாகவும் உங்களை சந்திக்க தாமதமாகி விட்டது.

ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையை நான்  வரவேற்கிறேன். அது குறித்து ஏற்கனவே நான் அறிக்கையும் அளித்து விட்டேன். குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கித் தர நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு நாங்கள் எல்லாவிதமான ஒத்துழைப்பையும் அளிப்போம். நான் எந்த பவர் குரூப்பிலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அம்மா அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த நடிகர் சித்திக் மீது புகார் எழுந்ததும் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, செயற்குழு கூடி அடுத்த பொதுச் செயலாளரை தேர்வு செய்யவே முதலில் முடிவு செய்தது.

ஆனால், அடுத்ததாக துணைச் செயலாளர் பாபுராஜ் மீது பாலியல் புகார் சொல்லப்பட்டது. இதனால், தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் பதவியை ராஜினாமா செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

சிக்கலில் ஃபார்முலா 4 கார் ரேஸ் : உயர்நீதிமன்றத்தில் SDAT அவசர முறையீடு!

ரேஷனில் வாங்காத ஆகஸ்ட் மாத பொருட்கள் செப்டம்பரில் கிடைக்குமா?: தமிழக அரசு பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share