தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி கோவையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இந்தநிலையில், வரும் ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2 லட்சத்து 64 ஆயிரம் மனுக்களும், பிற சேவைகள் மூலம் பெறப்பட்ட 6 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முதற்கட்ட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் குறித்த சிறப்பு முகாம்களை நடத்திட அரசு முடிவு செய்துள்ளது.
வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இந்த முகாம்களை நடத்திடவும், இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-க்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த இரண்டாம் கட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த மனுக்கள் இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்.
மொத்தம் 37 மாவட்டங்களில் உள்ள 388 ஒன்றியங்களில் அடங்கியுள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
5 ஊராட்சிகளை இணைத்து ஏறத்தாழ 20,000 மக்களுக்கு ஒரு சிறப்பு முகாம் வீதம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களைப் பதிவு செய்திட துறை வாரியாக அறைகள் அமைக்கப்படும். அனைத்து மனுக்களும் முதல்வரின் முகவரி என்னும் வளைதளத்தில் பதிவு செய்யப்படும்.
அனைத்து சிறப்பு முகாம்களிலும் ஒரு பிரத்யேக இ-சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டு, பதிவேற்றப்படும் மனுக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் ஒப்புகை அனுப்பப்படும்.
இந்த முகாம்கள் நடைபெறுவது குறித்து குறும்படம் தயார் செய்யப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரை மூலம் விளம்பரங்கள் செய்யப்படும்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் காணுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம்… வீடியோவை நீக்கிய இர்ஃபான்!