பியூட்டி பார்லர் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே முகத்தை பளபளபாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பெண்கள், ஆண்கள் என எல்லோரும் தங்களது முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பியூட்டி பார்லரையே நாடுகிறார்கள். இதற்காக அவர்கள் விலை உயர்ந்த க்ரீம்கள், ஃபேஸ் வாஷ்கள், இன்னும் சொல்லப்போனால் முக அழகு சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூட தயாராக உள்ளனர். நீங்கள் த்ரெடிங் செய்வதற்காக மட்டுமே பார்லர் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அங்கு உங்களுடைய சருமம் பற்றி உங்களிடம் எதிர்மறையாகக் கூறி உங்களிடம் பேஷியல் உள்ளிட்டவற்றை செய்யத் தூண்டிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் நாமே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு பேஷியல் செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் நாம் நினைத்த பார்க்காத பணச் செலவு நம் மீது வந்துவிழுந்துவிடுகிறது.
முகப் பராமரிப்புக்கு இனி பார்லர் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே நாம் முகத்தை அழகாகவும், பொலிவாகவும் மாற்றும் ஐந்து டிப்ஸ்களை பார்க்கலாம்.
1) முகத்தை சுத்தம் செய்தல்
வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வது முதல் படி முகத்தை சுத்தம் செய்வது ஆகும். இதில் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதும் கூட அடங்கும். ஒரு பருத்தித் துணியில் கிளிசரின் உடன் பாலை கலந்து எடுத்து உங்கள் முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவவும். இப்போது உங்கள் சருமம் அழுக்கு, மாசு இல்லாமல் தெளிவாக இருக்கும்.
2) முகத்தில் பேஷியல் செய்தல்
பேஷியல் செய்ய உங்களுக்கு சமையலறையில் உள்ள 3 பொருட்கள் தேவைப்படுகிறது. இவை மூன்றும் எளிதில் கிடைக்கின்றன. ஒரு பாத்திரத்தில் காபி பவுடர், தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
3) ஸ்கிரப் செய்தல்
சருமத்தில் இறந்த செல்களை நீக்க, உங்கள் சருமத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். தக்காளி அரைத்த விழுதை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தடவி, முகத்தில் மெதுவாக தேய்த்து, பின்னர் கழுவவும்.
4) ஆவிபிடித்தல்
இது சருமத்தில் அடைபட்ட துளைகளைத் திறக்கும். திறந்திருக்கும் துளைகளை அடைக்க உங்கள் முகத்திற்கு ஆவிபிடிக்க வேண்டும். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, முகத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
5) பேஸ் பேக் போடுதல்
கடைசியாக உங்கள் முகத்தில் ஒரு ஃபேஸ் பேக்கைப் போட வேண்டும். இதற்கு நீங்கள் ரசாயன பேஸ் பேக்குகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. பீட்ரூட் சாறு, அரிசி மாவு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றைக் கலந்து, அதை உங்கள் முகத்தில் சில நிமிடங்கள் தடவவும். பின்னர், உங்கள் முகத்தை ஒரு துணியால் துடைக்கவும். பேஸ் பேக் போட்டு கழுவிய பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது முக்கியமானதாகும்.
