உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு (Cloud burst Uttarakhand) காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கீர் கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் ஒரு கிராமமே உருக்குலைந்து போனது. வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ளது உத்தர்காசி மாவட்டம். இம்மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பயங்கர மழை கொட்டித் தீர்த்தது. மேக வெடிப்பும் பெருமழையும் சிறிது நேரம்தான்.. ஆனால் கொட்டிய கன மழையால் அப்பகுதியின் கீர் கங்கா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
கீர் கங்கா ஆற்றின் வெள்ளமானது, ஹார்சில் பகுதியில் தராசில் என்ற கிராமத்தின் ஊடே சீறிப் பாய்ந்தது. இந்த பெருவெள்ளத்தில் கிராமத்தின் பெரும்பாலான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது வீடுகளில் இருந்த பொதுமக்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
கீர் கங்கா ஆற்று வெள்ளத்தில் சிக்கி சிதைந்த கிராமத்தில் பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
