மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 2 லட்சம் பணிகள் 7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 20) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளான தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டு குழிகள், கல் வரப்பு போன்ற பல்வேறு வகையான பணிகளோடு நிலத்தடி நீர், மண்ணின் ஈரப்பதத்தை மேம்படுத்தத் தேவையான வறட்சித் தடுப்பு, நில மேம்பாடு, சிறு பாசன மேம்பாடு, பாரம்பரிய நீர்நிலைகள் புதுப்பித்தல் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குச் சந்தைகளுடனான இணைப்பை உறுதி செய்வதற்கும், விவசாய விளைபொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கும், சாலை இணைப்பு இல்லாத பழங்குடியின குடியிருப்புகள் உள்ள மலைப்பகுதிகளுக்கு ஓரடுக்கு கப்பிச்சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
2024-2025-ஆம் ஆண்டில் பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டுத் தண்டுகள், கசிவு நீர் குட்டை, செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள், மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இரண்டு இலட்சம் பணிகள் 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
TN Agri Budget: பயிர்க்கடன் – 16,500 கோடி ரூபாய் இலக்கு!
TN Agri Budget: 2 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.208 கோடி நிவாரணம்!