மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் இன்று(நவம்பர் 20) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மதியம் மூன்று மணி வரை 45.53 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் மும்பை சட்டமன்றத் தொகுதியில்தான் குறைந்தபட்சமாக 39.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தமுள்ள 288 தொகுதியில் 234 பொதுப் பிரிவினருக்கும், 29 பட்டியல் சாதியினருக்கும்(SC) மற்றும் 25 பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டுள்ளன.
சிவ சேனா(யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் அவரது மகனும் வோர்லி தொகுதி வேட்பாளரான ஆதித்யா தாக்கரே மும்பையில் இன்று மதியம் வாக்களித்தனர். மேலும் தொழிலதிபர் அம்பானி குடும்பத்தினர், சச்சின் குடும்பத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்களும் இன்று தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரபல திரைப்பட பாடகியான ஆஷா போஸ்லே தனது வாக்கைச் செலுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் “இன்று விடுமுறை என்பதால் படுத்துத் தூங்காதீர்கள். வாக்களிப்பது நமது கடமை. அதனால் உங்கள் வாக்கைச் செலுத்துங்கள்” என்று ஆஷா போஸ்லே கூறியுள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை இன்று விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடந்து வரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 3 மணி நிலவரப்படி 61.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: உத்திராடம்!
தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
உதயநிதியிடம் 25 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு : கோர்ட்டு உத்தரவு!