மகாராஷ்டிரா தேர்தல்: நாமினேஷன் தேதி முடிந்த பின்பும் நீடிக்கும் குழப்பம்!

Published On:

| By Minnambalam Login1

maharashtra elections 2024

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் (அக்டோபர் 29) முடிவடைந்தது. நேற்று காலை வரை ஆளும் கூட்டணியான மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணிகளுக்குள்ளே, சில தொகுதிகளில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் குழப்பம் நிலவியது.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ‘மகாயுதி’ கூட்டணியில் உள்ள பாஜக 148 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா 80 தொகுதிகளிலும், மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 53 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஐந்து தொகுதிகள் இந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 103 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 89 தொகுதிகளிலும் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 87 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

முன்னதாக மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு 125 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தது. இதனால் இந்த கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது. அதே போல் மகாயுதி கூட்டணியிலிருக்கும் பாஜக 150க்கும் அதிகமான தொகுதிகள் தங்கள் கட்சிக்கு வேண்டும் என்று முன்பு கேட்டிருந்தது.இதனால் இரு கூட்டணியிலும் குழப்பம் நீடித்தது.

ஆனால் தற்போது காங்கிரஸ் 103 தொகுதிகளிலும், பாஜக 148 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஏறத்தாழ 7 தொகுதிகளிலும், மகாயுதி கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏறத்தாழ 5 தொகுதிகளில் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

அதனால் ‘மகாயுதி’ மற்றும் ‘மகா விகாஸ் அகாதி’ சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் இறுதியானதா அல்லது கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான நாளான நவம்பர் 4ஆம் தேதிக்குள் சில வேட்புமனுக்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இதனால் நவம்பர் 4 அன்றுதான் இந்த இரண்டு கூட்டணிகள் மொத்தமாக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்று தெரியவரும்.

இதற்கிடையில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக, மன்குர்த் ஷிவாஜி நகர் வேட்பாளராக நவாப் மாலிக் நேற்று(அக்டோபர் 29) வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கூட்டணிக் கட்சியான பாஜக இதை  ஏற்றுக்கொள்ளவில்லை.

இது தொடர்பாக பாஜகவின் மும்பை பகுதியின் தலைவரான ஆஷிஷ் ஷேலார் நேற்று  வெளியிட்ட காணொளியில், “நவாப் மாலிக்குக்கும் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுக்கும் தொடர்புள்ளது என்று நாங்கள் வெகு நாட்களாகச்  சொல்லி வருகிறோம். அதனால் அவருக்காக நாங்கள் பிரச்சாரம் செய்ய மாட்டோம்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தேவரை போற்றக்கூடிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்: ஸ்டாலின் பேட்டி!

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

தேவர் குருபூஜை : கோரிப்பாளையத்தில் ஸ்டாலின் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share