அரசியலாக்கப்படும் மகா கும்பமேளா

Published On:

| By Minnambalam Desk

mahakumbh mela is politicized

கிருஷ்ண பிரதாப் சிங்

மகா கும்பமேளா திருவிழா அரசியல்மயமாக்கப்படுவது முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. கங்கையில் நீராடுபவர்களின் எண்ணிக்கை நியாயமற்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கும்பமேளாவின் காட்சியை மிகவும் பிரமாண்டமாகக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்யப்பட்டுள்ளது. mahakumbh mela is politicized

ஷாஹி ஸ்நானம் அமிர்த ஸ்நானம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஜனவரி 16 அன்று ‘நயா இந்தியா’ (Naya India) நாளிதழில் கட்டுரையாளர் ஸ்ருதி வியாஸ் எழுதிய ஒரு பத்தி வெளியாகியுள்ளது. ஷாஹி ஸ்நானத்தின் காட்சிகளைப் படம்பிடிக்கச் சென்றிருந்த புகைப்படப் பத்திரிகையாளரிடம் கூட்டத்தின் உற்சாகம், நம்பிக்கை பற்றி ஸ்ருதி வியாஸ் கேட்டபோது அவர், “என்ன நம்பிக்கை, என்ன பக்தி? மக்கள் உள்ளே வருகிறார்கள், நீராடுகிறார்கள், படங்களை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறார்கள்” என்று சொன்னதாக எழுதியிருந்தார்.

“இந்த வருட மகா கும்பமேளா நம்பிக்கையைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் பிரமாண்டமானது என்பதை உங்களையும் என்னையும்போலப் பலர் கருதியிருக்கக்கூடும்” என்று ஸ்ருதி வியாஸ் அந்தக் கட்டுரையில் கூறுகிறார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற முதல் கும்பமேளாவில் (1954ஆம் ஆண்டு) எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மக்கள் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் மாட்டு வண்டிகளிலும் பேருந்துகளிலும் கால்நடையாகவும் கும்பமேளா நடக்கும் இடத்துக்கு வந்து, கங்கையில் நீராடுவதைக் காணலாம். அவர்கள் பிரார்த்தனைகளிலும் அமைதியைத் தேடுவதிலும் மூழ்கியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.

2013ஆம் ஆண்டு வரை, மகா கும்பமேளாவின் போது புனித நதியில் நீராடுவதில் புனிதத்தன்மை இருந்தது என்றும் ஸ்ருதி கூறுகிறார். சமூக ஊடகங்களில் விருப்பக் குறிகளைப் பெறுவதற்காக, ‘கும்பமேளாவுக்கு ஏற்ற’ உடைகளை அணிந்துகொண்டு இளைஞர்கள், பெண்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், சாத்விகள், சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் என யாரும் அப்போதெல்லாம் அங்கே கூடவில்லை. இந்த ஆண்டு, மகா கும்பமேளா கண்காட்சியின் உணர்வையே கொண்டுள்ளது. அங்கே பதிவுசெய்யும் வீடியோக்கள் வைரலாகின்றன. மகா கும்பமேளா அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது என்று ஸ்ருதி கூறுகிறார்.

mahakumbh mela is politicized

அலகாபாத் என்னும் பெயரை மாற்றி பிரயாக்ராஜ் எனப் பெயரிடப்பட்ட நகரில் நடைபெறும் ‘புதிய இந்தியாவின்’ முதல் கும்பமேளா இது. ‘இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீகப் பாரம்பரியத்தின் வெளிப்பாடு’ என்னும் விளம்பர வாசகத்துடன் மோடி, யோகி ஆகியோரின் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. நாட்டின் தேசிய அடையாளத்துடன் இணைக்கப்பட்ட ஒரு ஆன்மீக நிகழ்வு திருவிழாக் கொண்டாட்டத்தின் பளபளப்பில் தொலைந்துபோகிறது.

தான் பக்தியுள்ள ஒரு இந்து என்றும், கும்பமேளாவில் இதற்கு முன்பு கலந்துகொண்டதுண்டு என்றும் ஸ்ருதி வியாஸ் தெரிவிக்கிறார். எனவே நாத்திகர், இந்து எதிர்ப்பாளர், மத மறுப்பாளர், இடதுசாரி என்றெல்லாம் முத்திரை குத்தித் தனது கூற்றுக்களை நிராகரிக்க முடியாது என்கிறார்.

மகா கும்பமேளா குறித்துப் பல தரப்புகளிலிருந்தும் எழுந்துள்ள புகார்கள் வலுவானவை. இந்த அரசியல்மயமாக்கல் வரம்பு மீறிச் செயல்பட்டிருக்காவிட்டால், இதில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தவோ ஷாஹி ஸ்னானை மறுபெயரிடவோ தேவையிருந்திருக்காது.

mahakumbh mela is politicized

பன்முக நம்பிக்கைகளை நிராகரிக்கும் போக்கு! mahakumbh mela is politicized

கும்பமேளா இந்த அளவுக்கு அரசியல்மயமாக்கப்படாமல் இருந்திருந்தால் இது வெறும் ‘ஒரு மதத்தின் மகா கும்பமேளா’வாக மட்டும் இருந்திருக்காது, பல்வேறு மதங்கள் சங்கமிக்கும் மகா கும்பமேளாவாக இருந்திருக்கும். இந்து மதத்தின் மரபுகளைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கும். ஏனெனில் இந்த மதம் அதன் உண்மையான வடிவத்தில் பல நம்பிக்கைகளின் சங்கமமாகும். அவற்றில் சில முரண்பாடானவையாக இருந்தாலும் பன்மைத்துவம் இந்து மதத்தின் சிறப்புகளுள் ஒன்று. mahakumbh mela is politicized

ஆனால், கோணலான அரசியல் செயல்படுவதால், வெளிநாட்டினர் ஓரளவு ‘தாராள மனப்பான்மையுடன்’ நடத்தப்படுகிறார்கள்; சற்றே மாறுபட்ட நம்பிக்கை அல்லது வழிபாட்டு முறையைக் கொண்ட சக குடிமக்கள் முரட்டுத்தனமாகப் புறக்கணிக்கப்பட்டு, மகா கும்பமேளாவிலிருந்து விலகி இருக்குமாறு சொல்லப்படுகிறார்கள். மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக ஆளும் அமைப்பின் பிரதிநிதிகளைப் பணியமர்த்துகிறார்கள். நாட்டின் குடிமக்களில் எந்த ஒருவரும் எந்தத் தடையும் இன்றி எங்கும் செல்ல முடியும் என்பதை உறுதி செய்யும் பொறுப்பைக் கொண்ட பணியாளர்கள் இவர்கள். mahakumbh mela is politicized

இந்த அரசியல்மயமாக்கும் கூட்டத்தின் தலைவர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) சர்சங்க்சாலக் (தலைவர்) மோகன் பாக்வத். அவர், ராமர், கிருஷ்ணர், சிவனை அனைத்து இந்துக்களின் ‘சுயம்’ என்று குறிப்பிடுகிறார். அவர்கள் (ராமர், கிருஷ்ணர், சிவன்) வெறும் கடவுள்கள்தானா அல்லது அவர்களை வணங்குபவர்களுக்கு மட்டுமே சொந்தமானவர்களா என்று போலித்தனமாகக் கேட்கவும் செய்கிறார். அவர் தனது கேள்வியை யோகி ஆதித்யநாத்திடம் கேட்டிருக்க வேண்டும். அவர் பாரதிய ஜனதா கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்தி, அவரை விட பெரிய ‘இந்து ஹிருதய சாம்ராட்’டாக உருவெடுக்க வேண்டும் என்று தீவிரமாக உள்ளார். mahakumbh mela is politicized

mahakumbh mela is politicized

ஆதித்யநாத்தும் அவரது கும்பலும் தொடர்ந்து செப்படி வித்தைகளைச் செய்துவருகின்றனர். இந்தச் செயல்கள் வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் ஒன்றிணைத்ததாக நம்பப்படும் ராமர் எதிர்காலத்தில் அனைத்து இந்துக்களுக்கும் சொந்தமானவராக இருப்பாரா என்று யோசிக்க வைக்கின்றன.

ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமர் கோயில், ராமநந்தர் பிரிவைச் சேர்ந்தது என்றும், சைவர்கள், சாக்தர்கள், சன்யாசிகளுக்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.

சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள், மகா கும்பமேளாவின் அசலான உணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு, அதன் மீது தங்களுடைய பிளவுபடுத்தும் மனநிலையைத் திணிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். பரஸ்பர உரையாடல், விவாதம் ஆகியவற்றின் பாதையைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

விடைகள் இல்லாக் கேள்விகள்! mahakumbh mela is politicized

ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இந்த நிகழ்வு குறித்துத் தெரிவித்த கருத்துக்கு பாஜக ஆற்றிய எதிர்வினை மகா கும்பமேளாவின் விரிவான அரசியல்மயமாக்கலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. பாவங்கள் செய்தவர்கள் மட்டுமே மகா கும்பமேளாவிற்குச் செல்ல வேண்டும் என்று சந்திரசேகர் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். “நான் பாவம் செய்யவில்லை, அவற்றை நான் கழுவ வேண்டிய அவசியமில்லை” என்றார்.

தலித் சமூகத்தின் பார்வையிலிருந்து கூறப்பட்ட இந்தக் கருத்துக்கு ஒரு மதத் தலைவரிடமிருந்து பதில் வந்திருக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எந்த மதத் தலைவரையும் விட இதனால் கலங்கிப்போனார்கள். யோகியின் அமைச்சரவையில் உள்ள தினேஷ் பிரதாப் சிங், சந்திரசேகரை இழிவாகப் பேசினார்.

அரசாங்கக் கொள்கை தொடர்பாக சந்திரசேகர் எழுப்பிய கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லை. அவரது கேள்விகளில் ஒன்று கும்பமேளாவுக்குச் செலவிடப்பட்ட பணம் தொடர்பானது. அந்த நிதியை மருத்துவப் பராமரிப்பு, கல்வி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கும், பல குடும்பங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் செலவிட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.

சந்திரசேகர் அளித்த மற்றொரு யோசனைக்கும் யாரும் பதிலளிக்கவில்லை. பிரதமரும் முதலமைச்சரும் மகா கும்பமேளாவிற்கு வருகை தரும்போது, கோவிட்-19 தொற்றுநோய்ப் பரவலின்போது அலகாபாத்தில் கங்கைக் கரையில் கண்டெடுக்கப்பட்ட இறந்த உடல்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்; முசாபர்நகரில் அடித்துக் கொல்லப்பட்டவர்களுக்காகவும், நீதி கிடைக்காததால் நாடாளுமன்றத்தின் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் ஆசாத் குறிப்பிட்டார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் மகா கும்பமேளா ஏற்பாடுகள் குறித்துக் கேள்விகளை எழுப்பினார். மதம் சார்ந்த இந்தச் சங்கமத்தில் விஐபி கலாச்சாரத்தின் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அகிலேஷ் ஆட்சியில் இருந்தபோது நடந்த கும்பமேளாவில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை நினைவில் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை சொன்னார்கள்.

mahakumbh mela is politicized

அரசு ஆதரவு மதத்திற்கு நல்லதல்ல! mahakumbh mela is politicized

இதையெல்லாம் மீறி, (ராகுல் காந்தியின் வார்த்தைகளில் சொல்வதானால்) ‘இந்திய அரசை’க் கைப்பற்றி, எந்த வரம்பிலும் நிற்காமல் செயல்படும் அதிகார வெறி கொண்ட அரசியல்வாதிகள், அவர்கள் பொற்காலமாகக் கருதக்கூடிய இந்தக் காலத்திலும் சில சமயங்களில் கையறு நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறார்கள்.

அரசியலமைப்பின்படி ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே இந்திய மக்கள் மதத்தை ஒரு தனிப்பட்ட தேர்வாகத்தான் கருதிவந்தார்கள். அரசியல் ரீதியாக அடிமையாக இருந்தபோதிலும், ஒரு மனிதன் தன்னுடைய சுய விருப்பத்தின்படி எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது கைவிடவோ சுதந்திரம் உள்ளது என்றும் இந்தியர்கள் நம்புகிறார்கள். அதனால்தான், கடந்த காலத்தில் பல உணர்ச்சி ரீதியான கொடுமைகளை எதிர்கொண்டபோதிலும், ஆட்சியாளர்கள் தங்கள் மதத்தைத் திணித்தபோதிலும், அவர்களின் நோக்கங்கள் வெற்றிபெற மக்கள் அனுமதிக்கவில்லை.

சமூக சீர்திருத்தத்திற்கான ஆட்சியாளர்களின் முயற்சிகளையும் மக்கள் நிராகரித்தார்கள். அது அவர்களின் பொறுப்பு அல்ல என்று நம்பினார்கள். அதிகாரத்தின் தாழ்வாரங்களிலிருந்து விலகி இருந்த துறவிகள், சமூக சீர்திருத்தவாதிகளின் சொற்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். அரசின் ஆதரவு எந்த மதத்தையும் அல்லது பிரிவையும் முன்னேற்றவோ காலத்தைத் தாண்டிக் கொண்டு செல்லவோ உதவாது என்பதை மக்கள் நன்கு புரிந்துவைத்திருந்தார்கள். அரசு ஆதரவுடன் பரவியதாகக் கூறப்படும் இஸ்லாம், சூஃபிகளும் துறவிகளும் அன்புடன் பிரச்சாரம் செய்த இடங்களில், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் வாள்கள் அசைந்த இடங்களைவிடவும் அதிகமாகப் பரவியது.

கிமு 262க்கும் 261க்கும் இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கலிங்கப் போரின்போது நடந்த கொடூரமான படுகொலைகளால் பாதிக்கப்பட்ட அசோகர் வன்முறையற்ற புத்த மதத்தில் தஞ்சம் புகுந்து அதைப் பல்வேறு வழிகளில் பரப்பினார். அகிம்சை, இரக்கம் ஆகியவை கொண்ட வாழ்க்கை முறையே மனிதனுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்ற செய்தியைப் பரப்பினார். அவரது குடிமக்களில் பெரும் பகுதியினர் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்கள். ஆனால் அவர் உலகிலிருந்து விடைபெற்ற பிறகு, 55 ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பாதையில் அவர்களால் தொடர முடியவில்லை.

mahakumbh mela is politicized

1556, பிப்ரவரி 11முதல் 1605, அக்டோபர் 27வரை ஆட்சியில் இருந்த முகலாயப் பேரரசர் அக்பர் முன்னிறுத்திய தீன்-இ-இலாஹி என்ற மதமும் இதேபோன்ற விதியைச் சந்தித்தது. அவர் பல மதங்களும் மொழிகளும் கொண்ட குடிமக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் வழிமுறையாக அந்த மதத்தை முன்வைக்க முயன்றார். அந்த நேரத்தில் உலகில் பரவலாக இருந்த அனைத்து மதங்களின் சாரத்தையும் இணைத்தார். இந்து மதம், இஸ்லாம் ஆகிய மதங்களின் கருத்துக்களை மட்டுமின்றி, சமண மதம், புத்த மதம், கிறிஸ்தவத்தின் அம்சங்களையும் தீன்-இ-இலாஹி கொண்டிருந்தது. ஆனால் மக்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

அக்பரின் அரசவை உறுப்பினர்களும் அவரது ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த மற்றவர்களும்கூட அதை நிராகரித்தனர். மான் சிங், அப்துல் ரஹீம் கான்-இ-கானன் போன்ற அக்பரின் நம்பகமான அரசவை உறுப்பினர்களும் தங்கள் மதங்களையே பின்பற்றிவந்தனர். தீன்-இ-இலாஹியை ஏற்கவில்லை. அக்பர் யாரையும் அதை ஏற்கும்படி கட்டாயப்படுத்தவில்லை. அதை ஏற்காதவர்கள் மீது அவர் எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. mahakumbh mela is politicized

அரசு ஆதரவுடன் இந்து மதத்தை உயர்த்துவது என்ற பெயரில் மகா கும்பமேளா போன்ற நிகழ்வுகளை அரசியலாக்குவதன் மூலம் இந்து மதத்தின் அடிப்படை உணர்வையே சீர்குலைக்கும் திமிர்பிடித்த ஆட்சியாளர்கள் இதைப் புரிந்துகொண்டால் போதும்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தேவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share