டிசம்பர் 15 முதல் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது.
திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கான ஒன்றிய-நகர- பகுதி-கிளை- வார்டு மற்றும் பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் இன்று (நவம்பர் 24) நடைபெற்றது.
இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், விடுபட்ட மற்றும் புதிதாக விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்களுக்கு டிசம்பர் 15, 2025 முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை சுமார் ரூ.30,000 கோடி மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை சுமார் ரூ.26,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் நவம்பர் 30, 2025-க்குள் ஆய்வு செய்து, தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்படும்.
எனவேதான், தகுதியான புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் 15, 2025 முதல் மாதம்தோறும் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
