மதுரையில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸை போலீசார் என்கவுன்ட்டர் செய்தது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. madurai rowdy subhash chandra
கடந்த மார்ச் 22-ஆம் தேதி மதுரை மாவட்டம் தக்கன்குளம் மொட்டமலை பகுதியில் திமுக பிரமுகர் வி.கே.குருசாமியின் உறவினராக கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் தாயார் ஜெயக்கொடி, மதுரை கல்மேடு நந்தகுமார், காமராஜபுரம் நவீன் குமார், சென்னையைச் சேர்ந்த கார்த்திக், திருப்பூரை சேர்ந்த அசன்,சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், ஆகிய ஏழு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சுபாஷ், மதுரை சிந்தாமணி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சுபாஷை பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரை தாக்க முயற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“சமீபத்தில் நடந்த கிளாமர் காளி கொலை வழக்கில் சுபாஷை தேடி வந்தோம். இன்று பெருங்குடி ஜங்ஷன் செக்போஸ்டில் போலீசார் இவரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், காரை நிறுத்தாமல் வந்துள்ளார். அவரை போலீசார் பின் தொடர்ந்து வந்து கைது செய்ய முயற்சித்தார்கள். அப்போது சுபாஷ் போலீசாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் காயடைந்த இரண்டு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் தன்னிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் போலீசாரை சுடமுயன்றான். ஆனால், எதிர்பாராதவிதமாக போலீசார் அந்த தாக்குதலில் இருந்து தப்பித்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார் சுபாஷ் காலில் சுடும்போது, அவர் குனிந்ததால் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அருகில் இருந்த வேலம்மாள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். madurai rowdy subhash chandra
