மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று (மே 29) தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளராக இருந்தவர் பொன் வசந்த். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான இவரது மனைவி இந்திராணி மதுரை மேயராக இருக்கிறார். madurai mayor indrani husband removed
வரும் ஜூன் 1-ஆம் தேதி மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தசூழலில் பொன் வசந்த் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அம்மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு கடந்த மே 23-ஆம் தேதி மதுரையில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மூர்த்தி, தளபதி, மணிமாறன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதே நாளில் மாநகராட்சி கூட்டத்தை நடத்த இந்திராணி ஏற்பாடு செய்திருந்தார். இதனால், திமுக கவுன்சிலர்கள் மேயரின் கணவர் பொன் வசந்தை தொடர்புகொண்டு கூட்டத்தை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. madurai mayor indrani husband removed
இதற்கு, கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முன்பே, மாநகராட்சி கூட்டத்தை நடத்த நிர்வாகம் முடிவு செய்ததாகவும், வேண்டுமென்றால் செயல் வீரர்கள் கூட்டத்தை தள்ளி வைக்கட்டும் என்று பொன் வசந்த் கவுன்சிலர்களிடம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தி முடித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார் மேயர் இந்திராணி. மேயரின் நடவடிக்கைகளுக்கு பின்னால் அவரது கணவர் இருப்பதாக, திமுக தலைமைக்கு புகார் சென்றிருக்கிறது.
இந்தசூழலில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் மேயரின் கணவர் பொன் வசந்தை தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று உத்தரவிட்டுள்ளார். madurai mayor indrani husband removed
ஜூன் 1-ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மேயரின் கணவர் பொன் வசந்த் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மதுரை மாவட்ட திமுகவுக்குள்ளும் அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.