தமிழகத்தில் 2ஆவது பெரிய நகரமாக விளங்கும் மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலை, மேம்பாலம் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து நத்தம் வரை 35 கிலோ மீட்டருக்கு ரூ.1028 கோடியில் மத்திய அரசின் “பாரத் மாலா” திட்டத்தின் மூலம் 4 வழிச் சாலையாக விரி வாக்கம் செய்யும் பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
தற்போது பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ஏப்ரல் 8 ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இப்பாலத்தை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் பாலத்தில் அடியில் 150 அடிக்கு ஒரு தூண் என மொத்தம் 268 தூண்களுடன் கட்டப்பட்டுள்ளன. தூண்கள் இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் ‘கான்கிரீட் கர்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.
மதுரையில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை, திருச்சிக்கு பயணத் தொலைவை குறைக்கவும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது.
இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும் எனக் கூறப்படுகிறது. இதே போல் இப்பாலத்தின் வழியாக சென்னை செல்வோருக்கு ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற எட்டாம் தேதி சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இப்பாலத்தை திறந்து வைக்கிறார்.
இதனை முன்னிட்டு இன்று பாலத்தில் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமாக பாலத்தை கடந்து செல்கிறார்கள்.
தமிழகத்திலேயே மிக நீண்டமான பாலமாக இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இராமலிங்கம்
