தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2023-24 ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 20) தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி குறித்து,
”சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.
முதல் வழித்தடமான பூவிருந்தவல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலைய பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவு செலவு திட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் அவினாசி, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும்.
மதுரை மற்றும் கோவை நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
மோனிஷா
