நகை கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியாத சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 சதவீதம் வரை இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் வசிக்கும் சுஜா சங்கரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 2015இல் எனது வீட்டின் கதவை உடைத்து 75 சவரன் நகை, ஒரு லட்சம் பணம் என சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து மதுரை எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் அளித்து 9 வருடங்கள் கடந்துள்ளது. ஆனால் தற்போது வரை போலீசார் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என தெரிவித்திருந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது நகை திருட்டு தொடர்பான குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என்று முடித்துவிட்டது. இது தொடர்பாக எனக்கு எந்த நோட்டீஸும் கொடுக்காமல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டனர் என தெரிவித்திருந்தார்.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த வள்ளிக்கண்ணு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த 2022ல் தனது வீட்டில் 67 பவுன் நகைகள் கொள்ளை போனது. 3 ஆண்டுகள் கடந்தும் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே விசாரணையை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணையை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றி கொள்ளையடிக்கப்பட்ட நகையை கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தங்கமணி, கரூரைச் சேர்ந்த லோகநாதன், மதுரையைச் சேர்ந்த ஜெயராமன், தேவகோட்டையைச் சேர்ந்த வின்சென்ட் அமலநாதன், புதுக்கோட்டையை சேர்ந்த சித்து ஆகியோர் தங்களது நகைகள் கொள்ளை போனது குறித்து மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நேற்று (நவம்பர் 25) விசாரித்த நீதிபதி புகழேந்தி, குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறி விசாரணை கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான உரிமை என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. இது போன்ற குற்றம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்தின் அமைதிக்கும், ஒழுங்குக்கும் எதிரானது. இதை தடுப்பது அரசின் கடமை. குற்றச்சம்பவங்களை விசாரிப்பது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் விளக்கி உள்ளது.
அந்த வகையில் நீதிமன்றம் ஆய்வு செய்ததில் சட்டப்படி தொடர் விசாரணை நடைபெறவில்லை என்பது தெரிகிறது. இதனால் நகைகள் கொள்ளை போன வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நகைகளை மீட்க முடியவில்லை எனில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டும்.
அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களின திருட்டு போட நகையின் மதிப்பில் 30 சதவீதத்தை இழப்பீடாக அரசு 12 வாரத்தில் வழங்க வேண்டும். நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலவரம் குறித்து மூன்று மாதத்திற்குள் முறையாக கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டன்ட் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். திறமை மிக்க போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு காவல் பிரிவை மாவட்டம் தோறும் ஏற்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
