நாம் தமிழர் அவதூறு: எக்ஸ் வலைதள அதிகாரிக்கு நோட்டீஸ்… எஸ்.பி வருண் குமார் வழக்கில் உத்தரவு!

Published On:

| By Selvam

தன் மீதான அவதூறு கருத்துக்களை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கக்கோரி, திருச்சி எஸ்.பி வருண் குமார் தொடர்ந்த வழக்கில், எக்ஸ் வலைதள இந்திய பொறுப்பாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (அக்டோபர் 4) உத்தரவிட்டுள்ளது.

தனது குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்ட நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களின் பதிவுகளை நீக்க கோரியும் அந்த நபர்களின் விவரங்களை எக்ஸ் வலைதள நிறுவனம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சி எஸ்.பி வருண் குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது வருண் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “காவல்துறை அதிகாரியாக எனது கடமையை செய்தபோது, எனது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில் அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களை பதிவிடுகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. எனவே, இதுபோன்ற பதிவுகளை எக்ஸ் வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கவும், பதிவுகளை வெளியிட்ட நபர்களின் விவரங்களை காவல்துறையிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார் தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், குற்றவியல் வழக்கறிஞர் ஆண்டனி பிரபாகரன் ஆகியோர், “போலியான ஐடிக்களில் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிடுவது அதிகரித்துள்ளது. எக்ஸ் தள கணக்குகள் தொடங்கும் போது ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளி, எஸ்.பி வருண் குமார் புகார் குறித்து மத்திய அரசு மற்றும் எஸ்க் வலைதள இந்திய பொறுப்பு அதிகாரி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் இந்திய விமானப்படை தின சாகச நிகழ்ச்சி… எப்படி பார்ப்பது ?

தமிழிசை குறித்து விமர்சனம்… வருத்தம் தெரிவித்த திருமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share