மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் மோடி உடனே தலையிட வேண்டும்; இதற்காக பிரதமர் மோடியை சந்திக்க தயாராக இருக்கிறேன் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் ரூ10,740 கோடி மதிப்பிலும் மதுரையில் ரூ.11, 368 கோடி மதிப்பிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையை 10 மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு, தற்போது, மக்கள் தொகை குறைவாக உள்ளதாக காரணம் காட்டி, தமிழ்நாடு அரசுக்கே இத்திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி உள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நகரின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும்; கோவையின் மக்கள் தொகை 15.8 லட்சம்; மதுரை மக்கள் தொகை 10. 2 லட்சம் என்பதால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை என்கிறது மத்திய அரசு.
ஆனால் கோவை- மதுரையை விட குறைவான மக்கள் தொகை கொண்ட கான்பூர், ஆக்ரா, நாக்பூர், புனே நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசின் இம்முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கோவை- மதுரையில் திமுக கூட்டணி கட்சிகள் கண்டனப் போராட்டம் நடத்தின. கோவை வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தமது எக்ஸ் பக்கத்தில், ” தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி! அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும்! அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்! என தெரிவித்துள்ளார்.
