தமிழகத்தின் கோவை, சேலம் போன்ற உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். மேலும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவை, மதுரை, சேலம் போன்ற உள்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சேலத்தில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
அம்மாபேட்டை, பச்சப்பட்டி, முகமதுபுரா போன்ற பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது மட்டுமல்லாமல் பல வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.
மதுரையை பொறுத்தவரை நேற்று(அக்டோபர் 13) 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. இதனால் மதுரை ரயில் நிலையம், அண்ணா நகர், மாட்டுத்தவாணி, திருநகர், அவனியாபுரம், சிம்மக்கல், வில்லாபுரம், உள்பட பல இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கியது.
அது மட்டுமல்லாமல் மதுரை மணிநகர் ஓர்க் ஷாப் சாலையில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் சுமார் 10 அடி உயரத்துற்கு மேலாக மழைநீர் தேங்கி நின்றது. தண்ணீரின் ஆழத்தை கவனிக்காமல் ஒரு கார் அதற்குள் சென்றது. ஆனால் சிறிது நேரத்தில் தண்ணீருக்குள் மூழ்க அரம்பித்தது. இதை பார்த்த அங்கிருந்த ஒரு போலிஸும், பொது மக்கள் இருவரும் காரில் மாட்டிக்கொண்ட இருவரையும் மீட்டனர்.
கோவையில் நேற்றும் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பல சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பீளமேடு, சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், போன்ற பகுதிகளில் நேற்று தொடர்ந்து மழை பெய்தது. இன்றும் கோவையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கனமழை: சென்னைக்கு மட்டும் தான் ஸ்பெஷல் கவனமா? – எடப்பாடி ஆதங்கம்!