மதுரையில் 10 நாட்களில் பரோட்டா மாஸ்டர் ஆவதற்கான பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது என்பது தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக இருக்கும் செய்தி.
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுதும் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அப்படியே வேலை கிடைத்தாலும் அவர்களுக்கான வருமானம் குறைவாகவே உள்ளது. ஆனால், பரோட்டா போடும் மாஸ்டர்களுக்கு மாதம் முப்பதாயிரம் சம்பளம் என பல இடங்களில் விளம்பரம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பரோட்டா செய்வதை கற்றுக்கொடுக்க பயிற்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. ஆம், மதுரையில் பரோட்டா செய்வதை கற்றுக்கொடுப்பதற்காகவே ‘செல்பி பரோட்டா ஸ்கூல்’ செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி பள்ளியில் 10 நாட்களில் எல்லா வகையான பரோட்டாக்களையும் எப்படி போடுவது என்பது பற்றி தெளிவாக சொல்லித்தருவதாக கூறுகிறார்கள். தங்கிப் படிக்க விடுதி வசதியும் உள்ளதாம்.
இதுக்குறித்து செல்பி பரோட்டா பயிற்சி பள்ளியின் உரிமையாளர் முகமது காமிம் பேசியதாவது, “பரோட்டா மாஸ்டர்களுக்கான பயிற்சி மையத்தை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த பயிற்சி பள்ளியில் இதுவரை 2,000 முதல் 2,500 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
10 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பன் பரோட்டா, மலபார் பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா, கொத்து பரோட்டா, மலேசியன் பரோட்டா, சிங்கப்பூர் பரோட்டா, மதுரை ஸ்டைல் சால்னா, தோசை வகைகள், சப்பாத்தி, புல்கா, கோதுமை பரோட்டா ஆகியவற்றை முழுவதுமாக செயல்முறையுடன் சொல்லிக் கொடுத்து வருகிறோம்.
இந்த வகுப்பில் பயிற்சி பெறுவதற்கு ரூ.4,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்க ரூ.2,000 கட்டணம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து, பரோட்டா போடுவது குறித்து சுருக்கமாகவும், தெளிவாகவும் கற்றுக்கொடுக்கப்படுவதாக பயிற்சி பெற்றவர்கள் கூறுகிறார்கள். மதுரை, அரியலூர், சென்னை, புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் அநேக இடங்களில் இருந்து வந்து, ’செல்பி பரோட்டா ஸ்கூல்’-ல் பயிற்சி பெறுகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள்… ‘இந்தியா’வின் வெற்றி கலைஞருக்குக் காணிக்கை! -ஸ்டாலின் அழைப்பு!
IPL 2024 final: மொத்தப் பரிசுத்தொகை எவ்வளவு? முழுவிவரம் தெரிந்துகொள்வோமா?