மதுரை சித்திரை திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்த இன்று முதல் முன்பதிவு!

Published On:

| By Selvam

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும் நேர்த்திக்கடன் செலுத்தவும் இன்று (ஏப்ரல் 7) முதல் முன்பதிவு செய்யலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமண நீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள்.

இந்தநிலையில், கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால் தங்கக் குதிரை, சுவாமியின் ஆபரணங்கள் பாதிக்கப்படுவதாக மதுரையை சேர்ந்த நாகராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல் துறையினர் அனுமதிக்கக் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நீதிமன்ற உத்தரவையடுத்து மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சங்கீதா, “கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது பாரம்பரிய முறைபடி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி உயர் அழுத்த மோட்டார்கள், மின் மோட்டார்களை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியன் நாடு: புத்தருக்குள் புகுந்தேன்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share