மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்த அதிமுக மாநாடு வெற்றிகரமாக நடந்திருக்கிறது என்றும் சுமார் 15 லட்சம் தொண்டர்கள் திரண்டார்கள் என்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதேநேரம் ஊடகங்களிலோ அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்காக சமைத்து அளிக்கப்பட்ட உணவு குறிப்பாக புளியோதரை சாதம் வேகாமல் இருந்ததால்…அதைத் தொண்டர்கள் கீழே கொட்டிவிட்டதாக செய்திகள் வெளியானது. பிறகு சிறுசிறு மலைகள் போல புளிசாதம் கீழே கொட்டப்பட்டுக் கிடக்கும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த தகவல்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
உடனடியாக இதுகுறித்து அதிமுக மாநாட்டின் உணவுக் குழு பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் திருவாரூர் காமராஜை அழைத்துக் கேட்டிருக்கிறார். ‘சில இடத்துல அவசரத்துல சாதம் வடிச்சதுல பிரச்சினையாகியிருக்குண்ணே…’ என்று அவர் எடப்பாடியிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மதுரை மாநாடு குறித்த ஏற்பாடுகளை கடந்த இரு மாதங்களாக தீவிரமாக கவனித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தபோது மாநாட்டு குழுக்களை அமைத்தார்.

மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு, வரவேற்பு குழு, பந்தல் குழு, மலர் குழு, உணவுக் குழு என அமைக்கப்பட்ட குழுக்களில் உணவுக் குழுவின் தலைவராக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்டச் செயலாளருமான காமராஜ் முதன்மையானவராக நியமிக்கப்பட்டார். அவரோடு முன்னாள் அமைச்சர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, பரஞ்சோதி மற்றும் கள்ளக்குறிச்சி குமரகுரு, சிவகங்கை செந்தில்நாதன் ஆகியோர் இடம்பெற்றனர்.
இவர்களில் கள்ளக்குறிச்சி குமரகுரு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர். மாநாட்டுக்கு வரும் லட்சோப லட்சம் தொண்டர்களின் உணவுக்கு பொறுப்பு ஏற்கவேண்டியது இந்த குழுதான்.
இன்று (ஆகஸ்டு 22) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “மதுரை மாநாடு பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. 50 லட்சம் பேர் திரண்டார்கள். ஆனால் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளோ, போக்குவரத்து ஏற்பாடுகளோ தமிழ்நாடு அரசு செய்யவில்லை. பல இடத்தில் தொண்டர்களை திசை திருப்பிவிட்டனர். அதையும் மீறி 15 லட்சம் பேர் மாநாட்டில் கலந்துகொண்ட்னார்
உணவு விஷயத்திலே எடப்பாடி தனி கவனம் செலுத்தினார். 15 லட்சம் பேருக்கு ஆக்கிய உணவிலே மிச்சம் மீதி இருப்பவற்றை எடுத்துக் காட்டி ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. 1 லட்சத்து 10 ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட அரிசி ஆக்கப்பட்டது. அதில் கொஞ்சம் புளியோதரை சிந்திக் கிடந்ததை பெரிதுபடுத்துகிறார்கள்.

மாநாட்டில் 3 இடங்களில் பிரம்மாண்ட உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. 750 அடுப்புகளில் உணவு தயாரானது. அதில் சில அடுப்புகளில் அவசர கதியில் வேண்டுமானால் சாதம் வேகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை பெரிதுபடுத்தலாமா? மாநாட்டு வெற்றியை மறைப்பதற்காக புளியோதரை தோல்வியை பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார் உதயகுமார்.
அதிமுக மாநாட்டுக்கு சென்றுவந்த சில நிர்வாகிகள் நம்மிடம், “மாநாட்டு உணவுக்காக ஏ கிளாஸ் அரிசியைத்தான் வாங்க வேண்டும் என்று எடப்பாடி உத்தரவிட்டார். மளிகை, காய்கறிகளும் தரமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே தெரிவித்தார். இதற்காகவே ஓரிரு கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாப்பிடும் ஹால் மட்டுமே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்தது. தொண்டர்களின் வசதிக்காக நூற்றுக்கணக்கில் கவுன்ட்டர்களை திறந்து உணவு கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு என்ற நிலையில்…. 19 ஆம் தேதி மதியத்தில் இருந்தே சமைக்க ஆரம்பித்துவிட்டனர். அப்படி முதல் நாள் மதியம் சமைத்த சாப்பாடு 20 ஆம் தேதி காலையில் பலருக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும் சில கவுன்ட்டர்களில் சாதம் வேகாமல் கொட்டை கொட்டையாய் அதாவது பெரிய பெரிய அரிசியாய் இருந்தது.
ஏ கிளாஸ் அரிசிதான் வாங்க வேண்டும் என்று எடப்பாடி உத்தரவிட்ட நிலையில்… மாநாட்டு சமையல் பணிக்காக பாலிஷ் செய்யப்பட்டு கேரளாவுக்குப் போகும் ரேஷன் அரிசியும் பல மூட்டைகள் வாங்கப்பட்டிருக்கிறது. அதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். அந்த அரிசிதான் வேகவில்லை. அதனால்தான் தொண்டர்கள் அதை அப்படியே கீழே போட்டுவிட்டனர். சில கவுன்ட்டர்களில் தொண்டர்கள் போய் சத்தம் போட்டதால் அந்த சாதத்தை எடுக்காமல் அப்படியே அண்டாக்களில் வைத்துவிட்டனர். அதுவே மலைபோல தேங்கிவிட்டது.

மாநாட்டுக்கு வரும் சொந்தக் கட்சித் தொண்டர்களுக்கே ரேஷன் அரிசி சோறுபோட்டது இப்போது பெரும் அசிங்கமாகியிருக்கிறது. எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். உணவுக் குழு பொறுப்பாளர் காமராஜுக்குத் தெரிந்து நடந்திருக்கிறதா தெரியாமல் நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
மேலும் இதுகுறித்து மதுரை உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்களும் தங்கள் முதல் கட்ட விசாரணையை தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
–வேந்தன்
சிரஞ்சீவி பிறந்த நாள்: வெளியான முக்கிய அறிவிப்பு!
’ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெல்ல முடியாது’- கங்குலி
