இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 11) இடைக்கால தடை விதித்துள்ளது. MadrasHighCourt stay order ed
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் ‘எந்திரன்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் கதை தன்னுடை ‘ஜூகிபா’ கதை என்று பத்திரிகையாளர் ஆரூர் தமிழ்நாடன் காப்புரிமை சட்டத்தின் படி கிரிமினல் குற்றம் என்று கூறி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கும் தாக்கல் செய்திருந்தார். இந்த உரிமையியல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ‘எந்திரன்’ படத்திற்காக இயக்குனர் ஷங்கர் ஊதியமாக பெற்ற ரூ.10.11 கோடி மதிப்பிலான மூன்று அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இயக்குனர் ஷங்கர் தரப்பில், “தனக்கு எதிரான உரிமையியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கியது செல்லுபடியாகாது என்று உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், “தனிநபர் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு அதனடிப்படையிலேயே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது” என்று வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஏற்கனவே தனிநபர் புகார் வழக்குகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஷங்கர் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருக்கக் கூடாது. அதனால் அமலாக்கத்துறையின் சொத்து முடக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த வழக்கு தொடர்பாக ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். MadrasHighCourt stay order ed