செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

Published On:

| By Selvam

அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமலாக்கத் துறை எம். பி., எம். எல். ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

அமலாக்கத் துறையின் மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 28-ஆம் தேதி புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை  செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து  நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன்  மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தினார்.

இந்த வழக்கு விசாரணையின் போது 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்கப்பட்டது.

நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார்..

இந்தநிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான  சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

செல்வம்

396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

’அலங்கு’ ஃபர்ஸ்ட் லுக்: சொல்ல வருவது என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share