விஜய் நடித்துள்ள ஜனநாயனக் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். இத்திரைப்படம் கடந்த 9-ந் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. ஜனநாயகன் படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம் முதலில் சில திருத்தங்களை செய்ய கூறியது. இதனையடுத்து திருத்தங்கள் செய்யப்பட்டன.
ஆனால், ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதால் மறு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் KVN புரொக்டஷன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி பி.டி.ஆஷாவின் இந்த உத்தரவுக்கு எதிராக உடனடியாக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9-ந் தேதி வெளியாகவில்லை. இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தியது.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தாவா, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.
