தமிழகப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றி வழங்குவது உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒப்புதல் தரவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு தமது சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது. இதனால் இந்த 10 மசோதாக்களும் சட்டங்களாகி நடைமுறைக்கு வந்துவிட்டன.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் பெஞ்ச் விசாரித்து மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்; ஆகையால் இம்மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
மேலும் இந்த வழக்கின் மனுதாரரர் பாஜகவைச் சேர்ந்தவர்; அரசியல் உள்நோக்கத்துடன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்; இவரது ரிட் மனுவை இவ்வளவு அவசரமாக ஏன் விசாரிக்க வேண்டும்? எனவும் மூத்த வழக்கறிஞர் வில்சன் கேள்வி எழுப்பினார். மேலும் உச்சநீதிமன்றம், தமிழக அரசு தொடர்பான மனு மீது உத்தரவு பிறப்பித்த பின்னர் இந்த வழக்கு மீதான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதால் வானம் ஒன்றும் இடிந்து விழாது என்றும் வில்சன் தமது வாதத்தில் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரர் வெங்கடாஜலபதி என்ற குட்டி அரசியல் உள்நோக்கத்துடன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யவும் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகளான ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வகை செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து இன்று உத்தரவிட்டது.
